August 7, 2026

ஆக. 24-ல் கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை: தற்காலிக சபாநாயகர் அன்பழகன்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 24-ஆம் தேதி துணைநிலை ஆளுநர் உரையுடன் கூடுகிறது; அன்று மதியம் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார் என்று தற்காலிக பேரவைத்தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார். பேரவைத் தலைவர் தேர்தல் கோப்பு லோக்நிவாஸுக்கு அனுப்பப்பட்டு ஆளுநர் பரிசீலனையில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் தற்காலிக பேரவைத்தலைவர் அன்பழகன் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: 16-வது புதுச்சேரி சட்டப்பேரவையின் முதல் கூட்டம் 20-05-2026 அன்று பேரவைக் கூடத்தில் நடைபெற்றது.

அன்றைய தினம் புதிதாக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டபின் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் சட்டப்பேரவை வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கூட்டப்படுகிறது.

அன்றையதினம் காலை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் சட்டப்பேரவையில் உரையாற்றுவார். அன்று மதியம் 3 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, 2026-2027ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (ரூ.14,100 கோடி மத்திய அரசு அனுமதி ) தாக்கல் செய்வார். துணைநிலை ஆளுநர் உரை மற்றும் முதல்வரின் பட்ஜெட் உரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாட்கள் பேரவை நடக்கும் என முடிவு எடுக்கப்படும். ஒரேநாளில் ஆளுநர் உரை, பட்ஜெட் தாக்கல் ஏற்கெனவே 2021ல் நடந்துள்ளது என்று தெரிவித்தார். சட்டப்பேரவைத் தலைவர் தேர்தல் எப்போது என்று கேட்டதற்கு, ‘அதற்கான கோப்பு துணைநிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது பரிசீலனையில் உள்ளது.

பேரவைத்தலைவர் பதவியை அதிமுக கேட்டு வருகிறது. முதல்வர் மீது எனக்கு முழு நம்பிக்கையுள்ளது. பேரவைத்தலைவர் தேர்தல் நடத்தும்போதுதான் எனக்கு எவ்வளவு ஆதரவு என்பது தெரியும். அரசியலமைப்பு சட்டப்படி பேரவைத்தலைவர் தேர்தல் நடைபெறும்.

முதல்வர் அனுமதி இருந்தால் மட்டுமே பேரவைத்தலைவர் தேர்தலில் போட்டியிடுவோம். இல்லாவிட்டால் போட்டியிட மாட்டோம். அமித் ஷாவை டெல்லியில் நான் சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு. புதுச்சேரிக்கு வரும்போது மரியாதை நிமித்தமாக சந்திப்போம்’ என்று அவர் கூறினார்.

Spread the love