சென்னை: பொருளாதார நிபுணர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான வருவாய் மேம்பாட்டுக் குழுவினர் முதல்வர் விஜய்யை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தமிழகத்தின் வரி மற்றும் வரி அல்லாத வருவாயை அதிகரிக்கவும், வருவாய் கசிவுகளை தடுத்து நிதி ஆதாரங்களை மேம்படுத்தவும் வருவாய் மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதன் தலைவராக மத்திய திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவரும், பொருளாதார நிபுணருமான மாண்டேக் சிங் அலுவாலியா நியமிக்கப்பட்டார். உறுப்பினர்களாக பேராசிரியர் கே.பி.கிருஷ்ணன், வரி கொள்கை நிபுணர் அரவிந்த் மோடி, முன்னாள் ஐஆர்எஸ் அலுவலர் நஜீப் ஷா, நிதித்துறை செயலர் எம்.ஏ.சித்திக், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் எம்.சுரேஷ்பாபு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழு மாநிலத்தின் சொந்த வரி வருவாயை அதிகரிப்பதற்கான புதிய வழிமுறைகள், வரியல்லாத வருவாயை உயர்த்தும் திட்டங்கள், புதிய வருவாய் ஆதாரங்களை கண்டறிதல், வருவாய் இழப்புகளை தடுக்கும் சீர்திருத்தங்கள் குறித்த ஆலோசனைகளை தமிழக அரசுக்கு 3 மாதங்களில் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாண்டேக் சிங் தலைமையிலான குழுவினர் முதல்வர் விஜய்யை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்தனர்.
அப்போது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப வருவாயை சீரமைக்க வேண்டியதன் அவசியம் மற்றும் வருவாய் ஆதாரங்களை வலுப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகவும், செயல் திட்ட அறிக்கை தயாரிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நிதியமைச்சர் மரியவில்சன், தலைமைச் செயலர் எம்.சாய்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

More Stories
சுதந்திர தினத்தையொட்டி காவல், தீயணைப்பு துறைகளைச் சேர்ந்த 1,057 பேருக்கு பதக்கங்களை அறிவித்தது ஒன்றிய அரசு
சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றும் முன் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும்: ஐகோர்ட் பதிவுத்துறை அறிவுறுத்தல்
80-வது சுதந்திர தினத்தை ஒட்டி சென்னையில் 30 கோயில்களில் அமைச்சர்கள் பங்கேற்புடன் சிறப்பு வழிபாடு, பொது விருந்து