August 14, 2026

சாவர்க்கர் மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: சுதந்திரப் போராட்டத் தலைவர் வீர சாவர்க்கர் குறித்து அவதூறாகப் பேசியதாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 2022-ம் ஆண்டு செய்தியாளர்கள் சந்திப்பின்போது, வீர சாவர்க்கர் ஆங்கிலேயர்களின் பணியாள். ஆங்கிலேயர்களிடம் இருந்து ஓய்வூதியம் பெற்றவர் என்று கூறி இருந்தார் ராகுல் காந்தி.

சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்பும் நோக்கில் ராகுல் காந்தி இவ்வாறு கூறியதாக நிருபேந்திர பாண்டே என்ற வழக்கறிஞர் புகார் மனு அளித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த லக்னோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம், 2024-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியது.

சம்மனை எதிர்த்து ராகுல் காந்தி தரப்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், சம்மனை ரத்து செய்ய மறுத்தது. மேலும், கீழமை நீதிமன்ற நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் செஷன்ஸ் நீதிபதியை ராகுல் காந்தி அணுகலாம் என்று வாய்மொழியாகக் கூறியது.

உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற விசாரணைக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிராக இழிவான அல்லது சர்ச்சைக்குரிய கருத்துகளை எதிர்காலத்தில் ராகுல் காந்தி வெளியிடக் கூடாது என்று எச்சரித்தது. மீண்டும் இதுபோன்று பேசினால் அவர் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அது குறிப்பிட்டது.

ராகுல் காந்தியின் மனுவை உச்ச நீதிமன்றத்தில் எதிர்த்த உத்தரப் பிரதேச அரசு, ராகுல் காந்தியின் கருத்துக்கள், வேண்டுமென்றே வெறுப்புணர்வை பரப்புவதாக குற்றம் சாட்டியது. மேலும், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டப்பூர்வமாக நியாயமானது என்றும் வாதிட்டது.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, ராகுல் காந்திக்கு எதிராக லக்னோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த குற்றவியல் அவதூறு புகாரையும் சம்மனையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

Spread the love