August 15, 2026

“கம்யூனிஸ்டுகளின் ரத்தம், வியர்வையால் விளைந்ததே இந்திய சுதந்திரம்” – டி.ராஜா

சென்னை: “சுதந்திரப் போரில் எண்ணற்ற உயிர்களை கம்யூனிஸ்ட் கட்சி ஈந்துள்ளது. ஏராளமான தோழர்கள் சிறைகளில் சித்திரவதைகளை அனுபவித்தனர். கம்யூனிஸ்ட்களின் ரத்தத்தாலும், வியர்வையாலும் விளைந்ததுதான் இந்திய சுதந்திரம்” என்று சுதந்திரதின விழாவில் உரையாற்றிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெளியான அறிக்கையில், ‘இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுதந்திர தின விழா மற்றும் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி, சென்னையில் உள்ள பாலன் இல்லத்தில் இன்று (15.08.2026) காலை நடைபெற்றது.

கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமை தாங்கினார். அகில இந்தியப் பொதுச் செயலாளர் டி.ராஜா தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றினார். அவர் தனது உரையில் “நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்கள் கம்யூனிஸ்டுகள். இந்தியா முழுமையான சுதந்திரத்தை அடைய வேண்டும் என்பதற்காக பூரண சுதந்திரம் வேண்டும் என முதலில் குரல் கொடுத்தவர்கள் கம்யூனிஸ்ட்கள்.

சுதந்திரப் போரில் எண்ணற்ற உயிர்களை கம்யூனிஸ்ட் கட்சி இழந்துள்ளது. ஏராளமான தோழர்கள் சிறைகளில் சித்திரவதைகளை அனுபவித்தனர். கம்யூனிஸ்ட்களின் ரத்தத்தாலும், வியர்வையாலும் விளைந்ததுதான் இந்திய சுதந்திரம். ஆனால் ஆர்.எஸ்.எஸ் விடுதலைப் போரில் பங்கேற்கவில்லை. அதன் அரசியல் பிரிவான பாஜக மத்தியில் ஆட்சியில் உள்ளது.

ஆர்எஸ்எஸ் மற்றும் ஒன்றிய பாஜக அரசால் நாட்டின் சுதந்திரம், இறையாண்மை, ஜனநாயகம், மதச்சார்பின்மை, அரசியல் சட்டம், பன்மைத்துவம், சமத்துவக் கோட்பாடுகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

பெற்ற சுதந்திரத்தை பேணி பாதுகாக்க வேண்டும். அம்பேத்கர் கூறியது போல நமது சுதந்திரம் அனைவருக்குமான சுதந்திரமாக அமைய வேண்டும். நாட்டின் சுதந்திரம் அனைவருக்குமான, ஆனந்த சுதந்திரமாக அமைய வேண்டும். அவ்வாறு அமைவதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்ட நிகழ்ச்சி முடிந்தவுடன், அந்த இடத்தை தீட்டுக்கழிப்பது என்ற பெயரில் சங்பரிவார் அமைப்புகள் செயல்பட்டுள்ளன. இது அப்பட்டமான தீண்டாமை குற்றச் செயலாகும். மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இழைக்கப்பட்ட இக்கொடுமையை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது” என டி.ராஜா குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் வஹிதா நிஜாம், டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே.சிவா, எஸ்.ஏழுமலை, டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, மு.வரதன், த.கு.வெங்கடேஷ் வேம்புலி, லி.உதயக்குமார், இளைஞர் பெருமன்ற மாநிலத் தலைவர் இரா.தமிழ்பெருமாள், ஐப்ஸோ மாநில துணை பொதுச் செயலாளர் பா.செந்தில் மற்றும் அலுவலக ஊழியர்கள் ச.லீலா மேரி, ஏ.ஷேக் அப்துல்லா, கே.சுதாகர், எஸ். லட்சுமி உட்பட ஏராளமானோர் கலத்து கொண்டனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love