February 7, 2026

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றம்

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

மக்களவை வழக்கம்போல் இன்று காலை 11 மணிக்கு கூடியது. அவை கூடியது முதல், ஓய்வுபெற்ற ராணுவத் தளபதியின் ‘நினை​வுக் குறிப்​பு​களில்’ இருந்து ராகுல் காந்தி மேற்கோள் காட்டி பேச அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார்.

மேலும், அவை கூடிய இரண்டு நிமிடங்களில் அவையை பகல் 12 மணிக்கு ஒத்திவைத்தார். 12 மணிக்கு அவை கூடியபோது மீண்டும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி எம்பிக்களின் கோரிக்கையை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டார்.

எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே, பிரதமரின் உரை இல்லாமல், குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை மக்களவை நிறைவேற்றியது. குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான எதிர்க்கட்சிகளின் திருத்தங்களை சபாநாயகர் ஓம் பிர்லா வாக்கெடுப்புக்குவிட்டார். அவை நிராகரிக்கப்பட்டன.

பின்னர், ஜனவரி 28-ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் வாசித்தார். எதிர்க்கட்சி எம்பிக்களின் எதிர்ப்பு முழக்கங்களுக்கு மத்தியில் அந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மக்களவை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், ‘‘நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசவும் விவாதத்தை தொடங்கவும் உரிமை உண்டு. அது இந்த அவையில் முற்றிலும் மறுக்கப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் ஒரே கோரிக்கை’’ என கூறினார்.

இது தொடர்பாகப் பேசிய பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங், ‘‘காங்கிரஸ் கட்சியின் அடிப்படை அணுகுமுறை எதிர்மறை எண்ணங்களால் நிரம்பியுள்ளது. அவர்கள் மீண்டும் மீண்டும் நாடாளுமன்ற அமர்வுகளை சீர்குலைக்கிறார்கள். இல்லாத விஷயங்களில் இருந்து பிரச்சினைகளை உருவாக்க முயல்கிறார்கள். இது நாட்டு மக்களுக்குத் தெரியும். அதனால்தான், அவர்கள் காங்கிரஸ் கட்சியை மீண்டும் மீண்டும் நிராகரிக்கிறார்கள். ஆனாலும் காங்கிரஸ் கட்சி அதை இன்னும் உணரவில்லை’’ என விமர்சித்தார்.

Spread the love