புதுடெல்லி: சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் 6 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்து, 36,444 கிலோ கார்பன் டை ஆக்சைடு உமிழ்வைக் குறைத்துள்ளது.
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 10 பெட்டிகளைக் கொண்ட இதில் 2,600 பேர் பயணிக்க முடியும். ஹரியானாவின் ஜிந்த் மற்றும் சோனிபட் இடையே இயங்குகிறது. இது தற்போது செயல்பாட்டில் உள்ள மிக நீளமான ஹைட்ரஜன் ரயில் ஆகும். 3,200 ஹெச்பி உந்துவிசை அமைப்புடன், உலகில் உள்ள மிக சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் ரயில்களில் இதுவும் ஒன்றாகும்.
மிகத் தூய்மையான எரிபொருளாகக் கருதப்படுவதால் ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்கள் சத்தமின்றி இயங்குகின்றன.
பூஜ்ஜிய உமிழ்வை உருவாக்குகின்றன மற்றும் டீசலை சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்க முடியும். இந்த ரயில் ஒவ்வொரு நாளும் புதிய மைல்கற்களை எட்டி வருகிறது. இதுவரை சுமார் 6,000 கிலோமீட்டர் தூரப் பயணத்தை நிறைவு செய்துள்ளது.
வரும் 2030-க்குள் நிகர-பூஜ்ஜிய கார்பன் டை ஆக்சைடு உமிழ்வை அடைய வேண்டும் என்று இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் ஒரு பகுதியாகத்தான் ஹைட்ரஜன் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில் ஒரு துணைப் பொருளாக நீராவியை மட்டுமே வெளியிடுகிறது.
இதனால் தூய்மையான எரிபொருள் தொழில்நுட்ப ரயிலாக இது விளங்குகிறது. வழக்கமான டீசல்-எலக்ட்ரிக் வாகனம் (DEMU) பயணிக்கும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் தோராயமாக 6.074 கிலோ கார்பன் டை ஆக்சைடு (CO2) உமிழ்வை உருவாக்குகிறது. இந்நிலையில், ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் இதுவரை சுமார் 36,444 கிலோ CO2 உமிழ்வைக் குறைக்க வழிவகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More Stories
37.5 டன் நிவாரணப் பொருட்களுடன் நேபாளம் சென்றது இந்தியாவின் 2வது விமானம்
சிறுவன் தோளில் பாய்ந்த கம்பியை அகற்றி மருத்துவர்கள் சாதனை
1,500 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணைகளை தயாரிக்க மத்திய அரசு திட்டம்