September 4, 2026

வறட்சியின் பிடியில் கொலம்பியா; கடும் குடிநீர் தட்டுப்பாடு.! சுழற்சி முறையில் தண்ணீர் விநியோகம்..

பொகோட்டா: கடும் வறட்சி காரணமாக கொலம்பியாவில் குடிநீருக்கே பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் ரேஷன் முறையில் வீடு வீடாக சென்று தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் கொலம்பியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஒரு பெரிய சுற்றுச்சூழல் மற்றும் சமூக நெருக்கடியாக மாறியுள்ளது. எல் நினோ காலநிலை மாற்ற விளைவுகளினால் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக, நாட்டின் முக்கிய நீர் ஆதாரங்கள் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளன.

குறிப்பாக கொலம்பிய தலைநகர் பொகோட்டா மற்றும் மெடலின் போன்ற முக்கிய நகரங்கள் இந்தத் தட்டுப்பாட்டால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் பொகோட்டாவிற்கு 70% குடிநீர் வழங்கும் சின்காசா நீர்த்தேக்க அமைப்பின் கொள்ளளவு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்தது. இதனால் பொதுமக்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் விநியோக முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதே போல மெடலின் நகரின் 20 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு சமமாகத் தண்ணீரைப் பகிர்ந்து வழங்க, சுழற்சி முறையிலான தண்ணீர் விநியோகம் அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. கொலம்பிய சுற்றுச்சூழல் நிறுவனமான IDEAM-ன் கணிப்புப்படி, இந்த ஆண்டின் எல் நினோ விளைவுகள் வரும் நவம்பர் 2026 முதல் மார்ச் 2027 வரை உச்சத்தைத் தொடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது 1950களுக்குப் பிறகு ஏற்படும் மிக மோசமான வறட்சியாக இருக்கலாம் என்று அதிபர் குஸ்தாவோ பெட்ரோ கவலை தெரிவித்து உள்ளார்.

Spread the love