September 10, 2026

பிரதமரிடம் கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு: ‘விக்சித் பாரத்’ உரையாடலில் பங்கேற்க செப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: விக்​சித் பாரத் இளம் தலை​வர்​கள் உரை​யாடல் நிகழ்​வில் பங்​கேற்க விருப்​பம் உள்​ளவர்​கள் செப்​.30-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்​கலாம் என்று மத்​திய இளைஞர் நலன், விளை​யாட்டு அமைச்​சகத்​தின் தமி​ழ​கப் பிரிவு இயக்​குநர் செந்​தில்​ கு​மார் தெரி​வித்​துள்​ளார்.

சுவாமி விவே​கானந்​தர் பிறந்​த​நாளான ஜன.12-ம் தேதி தேசிய இளைஞர் தினம் கொண்​டாடப்​படு​கிறது. இதை​யொட்டி மத்​திய இளைஞர் நலன், விளை​யாட்டு அமைச்​சகம் சார்​பில் ஆண்​டு​தோறும் விக்​சித் பாரத் இளம் தலை​வர்​கள் உரை​யாடல் என்ற நிகழ்வு டெல்​லி​யில் உள்ள பாரத் மண்​டபத்​தில் நடத்​தப்​படு​கிறது.

2047-க்​குள் இந்​தி​யாவை வளர்ந்த நாடாக மாற்​று​வதற்​கான புது​மை​யான யோசனை​கள், ஆலோ​சனை​கள், தீர்​வு​களை பிரதமரிடம் இளைஞர்​கள் நேரடி​யாகத் தெரிவிக்​கலாம். இந்​நிலை​யில், 2027 ஜனவரி​யில் நடை​பெற உள்ள நிகழ்​வுக்​கான தேர்​வு​கள், விநாடி-​வினா போட்​டிகள் நாடு முழு​வதும் தொடங்​கி​யுள்​ளன.

இதுகுறித்து சென்​னை​யில் மத்​திய இளைஞர் நலன், விளை​யாட்டு அமைச்​சகத்​தின் தமி​ழ​கம், புதுச்​சேரி பிரிவு இயக்​குநர் செந்​தில்​கு​மார் கூறிய​தாவது: விக்​சித் பாரத் இளம் தலை​வர்​கள் உரை​யாடல் 5 கட்​ட​மாக நடை​பெறுகிறது. முதல்​கட்​டத்​தில், ‘மை பாரத்’ இணை​யதளத்​தில் (mybharat.gov.in) கடந்த செப்​.1-ம் தேதி தொடங்​கி​யுள்ள ஆன்​லைன் விநாடி-​வினா போட்டி செப்​.30-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது.

2-ம் கட்​ட​மாக, கட்​டுரைப் போட்டி அக்.5 முதல் 19-ம் தேதி வரை ஆன்​லைனில் நடை​பெறும். 3-ம் கட்​ட​மாக ஒவ்​வொரு மாவட்​டத்​தில் இருந்​தும் சிறந்த 50 கட்​டுரைகள் ‘பிபிடி விளக்​கக் காட்​சி’ சுற்​றுக்கு தேர்ந்​தெடுக்​கப்​படும். மாவட்ட அளவி​லான பிபிடி விளக்​கக் காட்சி நவ.10 முதல் 16-ம் தேதி வரை நடை​பெறும். கடல்​சார் பொருளா​தா​ரம், மனிதவளம், உலகளா​விய போட்​டித் திறன் என்ற கருப்​பொருளின் அடிப்​படை​யில் இது நடை​பெறும்.

4-வது கட்​ட​மாக, மாநில அளவி​லான விக்​சித் பாரத் உரை​யாடல் நவ.17 முதல் டிச.12-ம் தேதி வரை நடை​பெறும். 5-வது கட்​ட​மாக தேசிய அளவி​லான போட்டி ஜன.10 முதல் 12-ம் தேதி வரை நடை​பெறும். ஆர்​வம் உள்ள இளைஞர்​கள் ‘மை பாரத்’ இணை​ய தளம் மூலம் பதிவு செய்து பங்​கேற்​கலாம். இது​வரை 70 ஆயிரம் இளைஞர்​கள்​ பதிவு செய்​துள்​ளனர்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Spread the love