September 21, 2026

“ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும் என்ற வெறி இருக்கிறது” – ஸ்டீபன் பிளெமிங் மனம் திறப்பு

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கான புதிய தலைமைப் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெமிங், ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதே தனது முதல் குறிக்கோள் என்றும், அது ஒரு பித்து நிலையாகவே தன்னைத் தொற்றிக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

டிசம்பரில் இங்கிலாந்து அணி, தென் ஆப்பிரிக்கா செல்கிறது. அந்தத் தொடரிலிருந்து ஸ்டீபன் பிளெமிங் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு தொடங்குகிறது. ஆனால், முதலில் இங்கிலாந்து, நியூஸிலாந்தை வெல்லும் வழிமுறைகளைக் கற்க வேண்டும், அதற்கு பிளெமிங் உதவ வேண்டும், ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது என்பது ஒட்டுமொத்த மனநிலை, சிந்தனை மாற்றத்தை நிகழ்த்தினால்தான் சாத்தியமாகும்.

இங்கிலாந்தை அப்படி மாற்றுவது கடினமே. இதனை பிரெண்டன் மெக்கல்லம் முயன்று பார்த்துத் தோல்வி அடைந்ததால்தான் இன்று பிளெமிங் அங்கு இருக்கிறார்.

கடைசியாக ஆஷஸ் தொடரில் 4-1 என்று இங்கிலாந்து உதை வாங்கியது. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து வருகிறது, இதுதான் இங்கிலாந்துக்கு உள்ள ஒரே வாய்ப்பு. இதற்குத்தான் பிளெமிங் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்கிறார்.

ஆனால், ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதே ஒரே குறிக்கோள் என்பது இங்கிலாந்து பயிற்சியாளர்களின் பித்துதானே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அதற்கு பதில் அளித்த பிளெமிங், “அப்படி அல்ல. ஆனால், எனக்கும் ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும் என்ற வெறி இருக்கிறது. நியூஸிலாந்துக்கும் இதே பித்து உண்டு. நாங்கள் இந்தப் பித்து நிலையை நேசிக்கின்றோம்.

ஆஸ்திரேலியாவை அனைத்திலும் வீழ்த்த வேண்டும். இது ஒரு தீராப் பீடிப்பு மனோ நிலையாகவே மாறிவிட்டது. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மகிழும் தருணங்களில் நானும் ஒருவனாக இருக்க ஆசைப்படுகிறேன், அதற்காகக் காத்திருக்கிறேன். அதற்கான தொலைநோக்குப் பார்வை எனக்கு இருக்கிறது. அதோடு ஆசையும் இருக்கிறது. அது மட்டும் நடந்து விட்டால் அது பிரில்லியண்ட்.

பாஸ்பால் அணுகுமுறை பற்றி ஒன்றும் கூறுவதற்கில்லை. சூழ்நிலைகளுக்கும், பிட்ச் உள்ளிட்ட நிலைமைகளுக்கும் ஏற்ப வீரர்கள் ஆட வேண்டும் என்பதுதான் என் கவனம். இருந்தாலும் கொஞ்சம் தன்னெழுச்சியாக ஆடுவதும் அவசியம்” என்கிறார் பிளெமிங்.

Spread the love