
ஸ்ரீமாதங்கி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு திட்டத்தின்கீழ் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள 3 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தை அந்நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் கடிகாசலம் திறந்துவைத்தார்.
சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஸ்ரீ மாதங்கி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் (நண்டு பிராண்டு) சார்பாக பெரு நிறுவன சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் 3 வகுப்பறைகள் கட்டிடம் கட்டி நேற்று திறக்கப்பட்டது.
இது 1,728 சதுர அடியில் ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. விழாவுக்கு ஸ்ரீ மாதங்கி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனர் தலைவர் கடிகாசலம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
இயக்குநர்கள் மஞ்சுளா கடிகாசலம், சுரேஷ் கடிகாசலம் ஆகியோர் தலைமையில் பள்ளி கட்டிடங்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிறுவனர் தலைவர் கடிகாசலம் கூறுகையில், “நாம் பிறந்த ஊருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால், எங்கள் நிறுவனம் சார்பில் நெமிலி மற்றும் அதன் அருகாமையில் உள்ள அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள், கழிப்பறைகள் மற்றும் சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம். அந்த வகையில் இங்கு 3 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
மேலும் கூடுதலாக மகளிருக்கான கழிப்பறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்த உள்ளோம். மாணவிகள் நன்றாக படித்து சாதனைகள் படைத்து பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும்” என்றார்.
நிகழ்ச்சியில் நெமிலி பேரூராட்சி தலைவி ரேணுகாதேவி சரவணன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சேகர், துணைத் தலைவர் செல்வம், தலைமை ஆசிரியை மாலதி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சரஸ்வதி, ஆசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.

More Stories
லாட்டரியில் ரூ. 49 கோடி வென்ற இளைஞர்!
தமிழ் மாணவர்களுக்கு வழிகாட்டும் ‘கொரியத் தமிழ்ச் சங்கம்’