October 4, 2026

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நாளை ஓய்கிறது பிரசாரம்: தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

சென்னை, அக்.3

மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் நாளை (அக்.4) மாலையுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இரு தொகுதிகளிலும் அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், தாராபுரம் (தனி) தொகுதியில் வெற்றி பெற்ற சத்யபாமா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததைத் தொடர்ந்து, இந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் கடந்த சில நாட்களாக இரு தொகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்கள், வீடு வீடாக வாக்கு சேகரிப்பு என தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.

விஜய் தீவிர பிரசாரம்

முதல்வரும் தவெக தலைவருமான விஜய், மதுராந்தகம் தொகுதியில் தனது கட்சி வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பல்வேறு கிராமங்கள் வழியாக ரோடு ஷோ மேற்கொண்ட அவர், பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். தாராபுரத்திலும் தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்கு ஆதரவாக விஜய் ஏற்கெனவே பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ரோடு ஷோ உள்ளிட்ட பிரசாரங்களில் பங்கேற்று வாக்கு சேகரித்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தாராபுரத்தில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நாளை இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை

பிரசாரம் நாளை மாலையுடன் முடிவடைவதால், கடைசி நேரத்தில் முடிந்த அளவு வாக்காளர்களை நேரில் சந்திக்க அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பதுடன், முக்கிய பகுதிகளில் இறுதிக்கட்ட பிரசாரங்களும் நடைபெறுகின்றன.

பிரசாரம் முடிந்ததும் தேர்தல் விதிகளின்படி அமைதிக்காலம் தொடங்கும். தொடர்ந்து அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளன.

Spread the love