
கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.700 கோடி மதிப்புள்ள 240 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் 100 ஆண்டு கால பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயில் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இக்கோயிலின் முதல் ஆதீனம் சிதம்பர சுவாமிகளுக்கு ஆற்காடு நவாப் திருப்போரூர், தண்டலம் கிராமங்களில் சுமார் 700 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் திருப்போரூர் கிராமத்தையே தானமான அளித்ததாக செப்புப் பட்டயம் உள்ளது.
இந்நிலையில் தொடர்ச்சியாக வந்த கோயிலின் ஆதீனங்கள் கோயிலுக்கு பணியாற்றிய குருக்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், விளக்கு ஏற்றியவர் என பலருக்கும் அவர்களின் குடும்ப சூழ்நிலை கருதி 21 வகையான மானியங்களை வழங்கினர். இவ்வாறு வழங்கியது போக சுமார் 460 ஏக்கர் நிலங்கள் தற்போது கந்தசுவாமி கோயில் பெயரில் வருவாய்த் துறை பட்டா தாக்கலாகி உள்ளது.
இந்நிலையில் அப்போதைய ஆதீனங்கள் சம்மதத்துடன் விவ சாய நிலங்கள் உள்ளூர் விவசாயிகளுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கந்தசு வாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் தனி நபர்கள் இடத்தில் இருப்பதாகவும். அவற்றை மீட்டு கோயில் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் கூறி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன்னாத் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதுகுறித்து பல வருடங்களாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில் நிலங்களை தனி நபர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என்று 2023ம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், பல்வேறு காரணங் களாலும். பொதுமக்கள் எதிர்ப்பாலும் இப்பணி தாமதமானது. இதையடுத்து நீதிமன்ற அவம திப்பு வழக்கு தொடரப்பட் டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் 21 நாட்களுக்குள் கோயில் நிலங்களை மீட்டு அறநிலையத் துறை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 30ம் தேதி அறநிலையத் துறை மற்றும் போலீஸார் இணைந்து விவசாய நிலங்களில் கோயில் பெயர் பலகை மற்றும் எச்சரிக்கை அறிவிப்பு பலகையை நடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக் கள் போராட்டத்தில் ஈடுபட்டு அறிவிப்பு பலகைகளை அகற்றினர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு வார கால அவகாசம் அளிப்பது என்றும், அதற்கு நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவு பெற்றுக் கொள்ளலாம் என்றும், தவறினால் 7-ம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் எனவும் தெரிவிக் கப்பட்டது. விவசாயிகள் தரப் பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த மனு விசாரணைக்கு வராத நிலையில் நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கட்சியினர், பொது மக்கள் இப்பிரச்சினையில் தமிழ்நாடு அரசு தலையிட வேண்டும் என்று கூறி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை அறநிலையத் துறை இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர்கள் ராஜலட்சுமி, கார்த்திகேயன், செயல் அலுவலர் குமரவேல் ஆகியோர் அடங்கிய குழுவினரும், பல்வேறு கோயில் களில் இருந்து அறநிலையத் துறை ஊழியர்களும் வரவழைக்கப்பட்டனர். மேலும், திருப்போரூர் வட்டாட்சியர் சரவணன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் அடங்கிய குழுவினரும் வந்திருந்தனர். மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி.அறிவழகன் தலைமையில் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதிகாலை 5.30 மணி முதல் கோயிலுக்கு சொந்தமான 60-க்கும் மேற்பட்ட புல எண்களில் அடங்கிய 229 ஏக்கர் 92 சென்ட் நிலங்கள் மீட்கப்பட்டு 19 இடங்களில் கோயில் பெயர் பலகையும், எச்சரிக்கை பலகையும் நடப்பட்டன. இதன் மூலம் ரூ.700 கோடி மதிப்புள்ள 230 ஏக்கர் விவசாய நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும், 100 ஆண்டு கால பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தற்போது மீட் கப்பட்டுள்ள விவசாய நிலங்களில் பயிர் செய்வோர் தொடர்ந்து பயிர் செய்துக் கொள்ளலாம் என்றும், கோயில் தரப்பில் அவர்களை குத்தகைதாரராக பதிவு செய்து குறைந்தபட்ச தொகை வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளோர் தாங்களாகவே முன்வந்து கோயிலுக்கு குத்தகை தொகையை செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
‘தமிழக ரயில்வே திட்டங்களுக்கு விரைந்து நிதி வழங்குக’ – மோடிக்கு ஸ்டாலின் கடிதம்
டிஎன்பிஎஸ்சி தேர்வைக்கூட நடத்த கையாலாகாத அரசு: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்கட்டமைப்புகளின் பராமரிப்பு பணிக்கு சிட்கோ-மாநகராட்சி ஒப்பந்தம்