திருப்பூர் மாநகராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட நஞ்சராயன் நகர் பகுதியில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சியின் பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ், சர்க்கார் பெரியபாளையத்தில் 15 எம்.எல்.டி. திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.இதற்காக அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் நீரேற்று நிலையங்களில் ஒன்றான நஞ்சராயன் நகர் பகுதியில், குழாய் உடைப்பு மற்றும் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இதனால், பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி, அப்பகுதிக்குச் செல்லும் பிரதான சாலையில் தேங்கி ஓடுகிறது. இந்தச் சாலையை மட்டுமே பயன்படுத்தி வரும் குடியிருப்புவாசிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் சூழல் நிலவுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், வெளியேறும் கழிவுநீர் நஞ்சராயன் குளத்தில் கலப்பதால் நீர் மாசடைவதுடன், நீர்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டும் பொதுமக்கள், உடனடியாக பாதாள சாக்கடை அடைப்பைச் சரிசெய்து, கழிவுநீர் சாலையிலும் குளத்திலும் கலப்பதைத் தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

More Stories
23-10-2026
பழனி
23-10-2026