புதுடெல்லி: டெல்லியில் 20 மார்க்கெட்களைச் சேர்ந்த 20 வர்த்தக பிரதிநிதிகளுடன் 20 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்குமாறு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நவம்பர் 1-ம் தேதி டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி சார்பில் மிகப்பெரிய பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் பேரணி நடந்தால் தீபாவளி வியாபாரம் பாதிக்கப்படும் என வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பேரணி நடைபெறும் இடத்திலிருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள 20 முக்கிய மார்க்கெட்களைச் சேர்ந்த 20 வர்த்தகர்களுடன் 20 நிமிட சந்திப்புக்கு ஏற்பாடு செய்யக் கோரி, வர்த்தக மற்றும் தொழில் துறை சம்மேளனத்தின் தலைவர் பிரிஜேஷ் கோயல், ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “எங்களுக்கு உரையாடலே வேண்டும், சண்டை அல்ல. சிறுவர்த்தகர்கள் உட்பட அனைவரின் கருத்துகளுக்கும் செவிசாய்ப்பதாக நீங்கள் (ராகுல்) கூறுகிறீர்கள். நாங்கள் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே கேட்கிறோம். பேரணியில் பங்கேற்க உள்ளதாக எதிர்பார்க்கப்படும் 10 லட்சம் மக்கள் கூட்டம் எவ்வாறு வியாபாரத்தை மேம்படுத்தி, அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுவரும் என்பதை நீங்கள் விளக்கினால், வர்த்தகர்கள் அமைப்பு உடனடியாகத் தனது எதிர்ப்பைத் திரும்பப் பெற்றுக்கொண்டு பேரணியை வரவேற்கும்.
அதேநேரம் அந்தக் கூட்டத்தால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும் என்று நாங்கள் உங்களை நம்பவைத்தால், பொது நலன் கருதி இந்தப் பேரணியை தீபாவளி வரை ஒத்திவைக்க வேண்டும். நீங்கள் வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையைத் திறக்கிறீர்கள். அதற்காக நாங்கள் உங்களை மதிக்கிறோம். ஆனால் தீபாவளி சந்தையில் அந்த அன்பின் கடையை மூடவைத்து விடாதீர்கள். நீங்கள் கூறும் ‘அன்பின் கடை’ என்ற முழக்கத்தின் உண்மையான முகம் வணிகர்களாகிய நாங்கள்தான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

More Stories
பாதரசம் தங்கமாக மாறியுள்ளது: பொக்ரான்-II விஞ்ஞானி குழு தகவல்
புற்றுநோய் மருந்துகள் விலை 93% வரை குறைந்தது – உச்ச நீதிமன்றம் கண்டனம் தாக்கம்
மருத்துவ மாணவர்களுக்கு கட்டாய கிராமப்புறப் பணி – நெறிமுறைகளை உருவாக்க உச்ச நீதிமன்றம் முடிவு