திருவனந்தபுரம்: தமிழகத்தின் தற்போதைய ஆளுநரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கேரள ஆளுநராக பதவி வகித்த போது, கேரள அரசு பணியாளர் தேர்வாணையத்தில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, அதன் தலைவர் எம்.ஆர். பைஜுவைப் பதவியிலிருந்து நீக்கம் செய்யுமாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு் கடிதம் அனுப்பினர்.
இந்நிலையில், கேரள பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர், திருவனந்தபுரத்தில் ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்தூரைச் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் கோபகுமார், “பல ஆண்டுகளாக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக 188 புகார்கள் வந்துள்ளதாக முதல்வரே சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். இருப்பினும், இதுகுறித்து பாரபட் சமற்ற விசாரணைக்கு உத்தரவிட அரசு தயாராக இல்லை.
தொடர்ந்து ஆட்சியில் இருந்த இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்.), ஐக்கிய ஜனநாயக முன்னணி(யுடிஎஃப்.) அரசுகள் முறைகேடுகளை மறைக்க முயன்றன. அந்த நடைமுறை தற்போதும் தொடர்கிறது. பாஜக மற்றும் இளைஞர் அணி யானயுவ மோர்ச்சா அளித்த புகார்களை முன்னாள் ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய பின்னரே, குறைந்தபட்சம் சில தேர்வாணைய அதிகாரிகளையாவது கைது செய்ய அரசு முன்வந்தது. முறைகேடுகள் தொடர்பான விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டது” என்றார்.
இதுதொடர்பாக, கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்ட பதிவில், “ராகுல் காந்தி நாடு முழுவதும் மாணவர்களின் குரல் குறித்துப் பேசுகிறார். ஆனால், கேரளத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஊழல் மற்றும் மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து அவர் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, இந்த முறைகேடுகள் தொடர்பாக, கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் துணைச் செயலர் சதீஷை குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

More Stories
பூட்டானில் பனி ஏரி உடைப்பு: மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட்
இண்டியா கூட்டணி போராட்டத்துக்கு சிஜேபி ஆதரவு: அபிஜித் திப்கே அறிவிப்பு
பாக். துறைமுகத்தில் 7 மாதமாக சிக்கி தவிக்கும் 6 இந்தியர்கள்: மீட்கக் கோரி மத்திய அரசுக்கு குடும்பத்தினர் கோரிக்கை