விருதுநகர்: ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சாப்டூர் வனச்சரகத்தில் புகழ்பெற்ற சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்கள் அமைந்துள்ளன.
இக்கோயில்களுக்கு மலைப் பாதை வழியாக 10 கி.மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டும். இங்கு பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக சதுரகிரி மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலைக்கோயில் ஏற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால், ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல 6-ஆம் தேதி முதல் நவம்பர் 9-ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

More Stories
ஸ்ரீகிருஷ்ணஜென்மபூமி கோயில் காணிக்கையில் தங்கம், வெள்ளியின் தூய்மையை சோதிக்க திட்டம்
பழநி முருகன் கோயிலில் தங்க ரத கட்டணம் ரூ.2,500-ஆக திடீர் உயர்வு: பக்தர்கள் அதிர்ச்சி
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம்