காயிதே மில்லத் அறிவியல் கல்லூரியின் பொன்விழா கொண்டாட்டம்

காயிதே மில்லத் கல்லூரி பொன்விழா கொண்டாட்ட நிறைவு விழாவில் கல்லூரி பொன்விழா மலரை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கோவி.செழியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வெளியிட்டனர். உடன், கல்லூரி தாளாளர் தாவூத் மியாகான், ராயல் கிங்ஸ் குழும தலைவர் சிராஜுதீன் உள்ளிட்டோர். | படம்: எம்.முத்துகணேஷ் |
மேடவாக்கம்: உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு, இந்தியாவில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என்று, மேடவாக்கம் காயிதே மில்லத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பொன்விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே மேடவாக்கத்தில் உள்ள காயிதே மில்லத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 50-ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் எம்.ஜி. தாவூத் மியாகான் தலைமை தாங்கினார்.
கிரெடாய் தலைவர் எ. முஹம்மத் அலி, சிங்கப்பூர் ராயல் கிங்ஸ் குரூப் தலைவர் சிராஜுதீன், சென்னைப்பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், காயிதே மில்லத் கல்லூரியின் புரவலருமான சே. சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு இந்தியாவில் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. உயர்கல்வி தேர்ச்சி விகிதத்திலும், உயர்கல்வி செயற்கை விகிதத்திலும் இந்தியாவில், தமிழ்நாடு இன்றைக்கு முதன்மை மாநிலமாக இருந்து கொண்டிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் தமிழ்நாடு அரசின் மாணவர்களுக்கான திட்டங்கள் தான் என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இதுவரை 42 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். குறிப்பாக, ஜப்பானில் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பைப் பெற்றுத் தந்து சாதனை படைத்துள்ளது. ரூ.1,172 கோடி மதிப்பீட்டில் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.
இதில் நவீன சாட்ஜிபிடி (ChatGPT), ஏஐ (AI) கருவிகளைப் பயன்படுத்த மாதச் சந்தாவையும் அரசே ஏற்கிறது. 7.5 சதவீத இடஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்சார் படிப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படுவதோடு, அவர்களின் முழுச் செலவையும் அரசே ஏற்றுள்ளது” என்றார். அமைச்சர் கோவி.
செழியன் பேசும்போது, “உயர் கல்வியில் தேசிய இலக்கை தமிழ்நாடு முறியடித்து. 2030-ம் ஆண்டில் உயர்கல்வியில் அடைய வேண்டிய இலக்கை, தமிழ்நாடு 2021-லேயே (54%) எட்டிவிட்டது. சிறுபான்மையின மக்களின் பாதுகாப்புக்கு திராவிட இயக்கம் அரணாக இருக்கிறது. மதச்சார்பற்ற கொள்கையின் அடையாளமாக முதல்வர் ஸ்டாலின் திகழ்கிறார்” என்றார்.
அமைச்சர் அன்பில் மகேஸ் பேசும்போது, “முன்பு அனைவரும் ஒன்றாக அமர்ந்து படிக்க முடியாத நிலை இருந்தது.ஆனால் இன்று அனைவரும் சமமாக அமர்ந்து கல்வி பயில்கிறோம். வெறும் கல்லூரிப் படிப்பு மட்டும் போதாது. இன்றைய காலத்துக்கு ஏற்ப திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் பயிற்சி பெற்றவர்களில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது” என்றார்.
இவ்விழாவில், காயிதே மில்லத் கல்லூரியின் பொன்விழா சிறப்புப் புத்தகம் வெளியிடப்பட்டது. இதில், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி, கே.என். பாஷா, ஓமியாட் தலைவர் எ. முஹம்மத் அஷ்ரப், பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

More Stories
அரசு நிகழ்ச்சிகள், பள்ளிகளில் வந்தே மாதரம் கட்டாயம்! மத்திய அரசு உத்தரவு
உயர்வுடன் தொடங்கி… சில நிமிடங்களில் சரிந்த பங்குச் சந்தை!
ரஷ்யாவில்தான் அதிக எண்ணிக்கையில் இந்திய மாணவர் மீது தாக்குதல்: வெளியுறவு அமைச்சகம் தகவல்