November 14, 2026

பழனி முருகன் மலைக் கோவிலில்  கந்த சஷ்டி திருவிழா  சூரசம்காரம் 

 பழனி நவம்பர் 14

பழனி முருகன் மலைக்கோவிலில் நாளை கந்தசஷ்டி திருவிழாவை நான்கு சூரர்கள் சம்ஹாரம் நடைபெறுகிறது. பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் கந்த சஷ்டி திருவிழா சிறப்பானதாகும் இத்திருவிழா  கடந்த 10ஆம் தேதி மலைக்கோவிலில் காப்பு கட்டுடன் தொடங்கியது. அது முதல் பக்தர்கள் தங்களின் கைகளில் மஞ்சள் நிறக் கயிற்றை காப்பாக கட்டிக்கொண்டு கடும் விரதம் இருந்து வந்தனர்.  இதில் முக்கிய நாள் நிகழ்ச்சியாக நாளை சூர சம்ஹாரம் நடைபெறுகிறது.  நாளை நவம்பர் 15ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு  சாய ரட்சை  பூஜையும் மதியம் 3 மணிக்கு பராசக்தி வேல் வாங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதன் பின்பு கோவில் நடை சாத்தப்படுகிறது. அதனால் நாளை  காலை 11:30 மணிக்கு மலைக்கோவிலில் அனைத்து கட்டண சீட்டுகளும்  நிறுத்தப்படும். மேலும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன் பின்பு மாலை 5 மணி அளவில் முருக பெருமான் வள்ளி தெய்வானையுடன் அடிவாரம் திருக்கல்யாணம் மண்டபத்தில் எழுந்தருள்ளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பின்பு முருகப்பெருமான் பராசக்தி வேலுடன் பழனி திருஆவினன்குடி  கோவிலுக்கு சென்று பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்பு பராசக்தி வேலுடன் புறப்பட்டு முருகப்பெருமான், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கிரி  வீதிகளில் தாரக சூரன், பானுகோபன்  சூரன், சிங்கமுக சூரன்,  சூரபத்மன் சூரன், ஆகிய நான்கு சூரர்களையும் வேல் கொண்டு வதம் செய்கிறார். பின்பு இரவு 9:00 மணிக்கு சூரர்களை வதம் செய்த முருக பெருமானுக்கு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் ஆர் ஹரிஹரன், துணை ஆணையர் வெங்கடேஷ், அறங்காவலர் குழு தலைவர் கே எம் சுப்பிரமணியன், அறங்காவலர்கள் சேலம் தனசேகர், சு. பாலசுப்பிரமணி, ஜி ஆர் பாலசுப்பிரமணியம், அன்னபூரணி ஆகியோர் செய்து வருகிறார்கள்.

Spread the love