ஒட்டன்சத்திரம், நவ.
திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொருளூர் ஊராட்சியில், தூய்மை பாரத இயக்கம் மற்றும் தூய்மை தமிழகம் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் கழிவு தணிக்கை நடைபெற்றது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் முன்னோடித் திட்டமாக கழிவு தணிக்கைப் பணிகள் நான்கு நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு, ஏற்கனவே மூன்று நாட்கள் நிறைவடைந்துள்ளன. இதன் நான்காவது நாள் தணிக்கைப் பணி பொருளூர் ஊராட்சியில் நடைபெற்றது. இதனை தூய்மை தமிழகம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மாநிலப் பிரதிநிதி பிரசன்னா நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.
காலை 7 மணிக்கு தூய்மைக் காவலர்கள் ஊராட்சிக்கு உட்பட்ட வீடுகளுக்குச் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள் மற்றும் சிறப்பு கவனக் கழிவுகள் என நான்கு வகையாகப் பிரித்து கழிவுகளைச் சேகரித்தனர்.
மேலும், ஊராட்சிக்கு உட்பட்ட 10 குக்கிராமங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு அலுவலகங்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் கழிவுகள் தனித்தனியாகப் பிரித்து சேகரிக்கப்பட்டன. இவ்வாறு சேகரிக்கப்பட்ட கழிவுகள் அனைத்தும் குப்பை பிரித்தல் மற்றும் சேகரிப்பு மையத்திற்குக் கொண்டுவரப்பட்டு எடையிடப்பட்டன. பின்னர் அதன் அளவுகள் உரிய படிவங்களில் பதிவு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன.
கிராம ஊராட்சிகளில் உருவாகும் திடக்கழிவுகளின் உண்மையான அளவு மற்றும் தன்மையைக் கண்டறிந்து, அதற்கேற்ப அறிவியல் பூர்வமான, நடைமுறைக்கு ஏற்ற மற்றும் நிலையான திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்களை உருவாக்குவதற்கான அடிப்படைத் தரவுகளைப் பெறுவதே இக்கழிவு தணிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்யராஜ், திடக்கழிவு மேலாண்மை நிபுணர், தூய்மை பாரத இயக்க வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் அன்னக்கொடி, மோகன், ஊராட்சி செயலர் (பொறுப்பு) செல்வன், கிராம சுகாதார ஊக்குநர்கள், தூய்மைக் காவலர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், மின்கல வண்டிகள் மற்றும் தூய்மைக் காவலர்கள் மூலம் வீடுகள் மற்றும் கடைகளுக்கு முன்கூட்டியே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருந்ததால், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து கழிவுகளை நான்கு வகைகளாகப் பிரித்து வழங்கினர். இதனால் பொருளூர் ஊராட்சியில் கழிவு தணிக்கைப் பணிகள் சிறப்பாக நடைபெற்றன.

More Stories
14-11-2026
பழனி முருகன் மலைக் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா சூரசம்காரம்
திண்டுக்கல்லில் காங்கிரஸ் சார்பாக மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் பயிற்சி முகாம்