November 17, 2026

சொத்து ஆவணங்கள் இனி தபாலில்! தமிழக அரசு 

தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட சொத்து ஆவணங்களை மையப்படுத்தப்பட்ட அச்சகத்தில் அச்சிட்டு, தபால் மூலம் வீடுகளுக்கே அனுப்பும் திட்டத்துக்கு அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்டுள்ள அரசாணையின்படி, பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய பிரத்யேக காகிதத்தில் ஆவணங்கள் அச்சிடப்படும். இதற்கான காகிதங்கள் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்திடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யப்படும்.

அச்சிடப்பட்ட ஆவணங்கள் இந்திய அஞ்சல் துறையின் ஸ்பீட் போஸ்ட் மூலம் உரிமையாளர்களின் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அனுப்பப்படும். சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் 48 மணி நேரத்திற்குள் விநியோகிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொலைதூர மாவட்டங்களுக்குத் தனியாகக் காலக்கெடு நிர்ணயிக்கப்படும்.

இத்திட்டம் அமலுக்கு வரும்போது, ஆவணங்களைப் பெற சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் நேரில் செல்ல வேண்டிய தேவை குறையும். ஆவணங்களின் அச்சிடுதல், பாதுகாப்பு, விநியோகம் ஆகிய பணிகள் ஒருங்கிணைக்கப்படும். சொத்துப் பதிவு நடைமுறையை எளிமைப்படுத்தும் நோக்கில் இந்தப் புதிய வசதிக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Spread the love