கராச்சி / இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் சிந்து உள்ளிட்ட மாகாணங்களைப் பிரித்து புதிய மாகாணங்களை உருவாக்க வேண்டும் என்ற அந்நாட்டு ராணுவத் தளபதி அசீம் முனீர் திட்டத்துக்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர்.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் மற்றும் அவரது நெருங்கிய சகாவும், அந்நாட்டு உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வி ஆகியோர் சிந்து உள்ளிட்ட மாகாணங்களைப் பிரித்து புதிய மாகாணங்களை உருவாக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளனர். இந்தத் திட்டத்துக்கு எதிராக பாகிஸ்தானின் முக்கிய வர்த்தக நகரான கராச்சியில் பல்லாயிரக்கணக்கான சிந்து தேசியவாதிகள் வீதிகளில் இறங்கி பிரம்மாண்டப் பேரணி நடத்தினர்.
பாரம்பரிய சிந்தி தொப்பி மற்றும் ‘அஜ்ரக்’ சால்வை அணிந்து, வண்ணமயமான பேருந்துகள் மூலம் சென்று கராச்சியில் திரண்ட போராட்டக்காரர்கள், சிந்து மாகாணத்தைப் பிரிக்கும் முயற்சியைக் கைவிடக் கோரி முழக்கமிட்டனர். மேலும், சிந்து தேசியவாத அமைப்பான ‘ஜியே சிந்து முத்தாஹிதா மகாஸ்’, தனியான சிந்துதேஷ் கோரிக்கையை முன்வைத்ததுடன், பாகிஸ்தானின் அதிகாரமிக்க பஞ்சாப் மாகாணத்துக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்கப்போவதாகவும் எச்சரித்துள்ளது.
ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிந்து மாகாணத்தின் முக்கியக் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலா வல் பூட்டோ-சர்தாரி, சிந்துவைப் பிரிக்கும் எந்தவொரு முயற்சிக்கும் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“இந்த நடவடிக்கை சிந்து மக்கள் ஆயுதம் ஏந்துவதற்கும், கராச்சி மற்றும் ஹைதராபாத் வீதிகளில் ரத்த ஆறு ஓடுவதற்கும் வழிவகுக்கும்” என்று அவர் எச்சரித்துள்ளார்.
15 மாகாணங்களாக பிரிப்பு
பாகிஸ்தானில் தற்போது 4 மாகாணங்கள் உள்ள நிலையில், அவற்றை 12 முதல் 15 மாகாணங்களாகப் பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்துவது குறித்து 2026-ம் ஆண்டு இறுதிக்குள் முடிவெடுக்கப்படும் எனப் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.

More Stories
‘டிச.16 அன்று வங்கதேசம் செல்ல ஷேக் ஹசீனா திட்டம்’ – செய்தித் தொடர்பாளர் தகவல்
168 குழந்தைகளை கொன்ற உங்களை விடமாட்டோம்: அமெரிக்க கடற்படை அதிகாரிகளுக்கு ஈரான் எச்சரிக்கை
ட்ரம்ப், புதின், ஜி ஜின்பிங் நவ.19-ல் சந்திப்பு: அணு ஆயுதங்களை குறைப்பது குறித்து முக்கிய ஆலோசனை