November 26, 2026

தவெக எம்எல்ஏ மீதான புகார்: ஆட்சியர் முகாம் அலுவலகத்திற்கு வந்த விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங்!

சென்னை: கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகார் தொடர்பாக, ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங், நேற்று தனது விசாரணையைத் தொடங்கினார்.

முதற்கட்டமாக, வழக்கு தொடர்பான ஆவணங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வாக்குமூலம் பெற்றார். 

தொடர்ந்து, நேற்று ( 25,11,2026)மாலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொண்டார். இன்று காலை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலரிடமும் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்று ( 26.11.2026) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்திற்கு விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் நேரில் வருகை தந்துள்ளார். அங்கு மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மாவட்ட ஆட்சியர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ள பல்வேறு தகவல்கள் மற்றும் குறிப்புகள் தொடர்பாக விசாரணை அதிகாரி கூடுதல் கேள்விகளை எழுப்பி, இன்றும் வாக்குமூலம் பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் கணவரிடமும் விசாரணை நடத்த விசாரணை அதிகாரி திட்டமிட்டுள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், தவெக சட்டமன்ற உறுப்பினர் மீதான புகார் தொடர்பான விசாரணை கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Spread the love