November 27, 2026

ஆண் அரசு ஊழியர்களுக்கு 15 நாள் தந்தையர் விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னை | செய்திப்பிரிவு | நவம்பர் 27, 2026

தமிழக அரசு ஆண் பணியாளர்களுக்கு, முதல் முறையாக 15 நாட்கள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு வழங்கப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், அரசு ஆண் பணியாளர்களுக்கும் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசுப் பணியாளர்களிடமிருந்து அரசுக்கு வந்துள்ளது.

குழந்தை பிறக்கும் காலகட்டம் தாய் மற்றும் குழந்தைக்கு மிகவும் முக்கியமானது. அந்த நேரத்தில் தாய்க்கு உடல் மற்றும் மனரீதியான ஆதரவு அளிப்பதுடன், குழந்தை பராமரிப்பிலும் தந்தையின் பங்களிப்பு அவசியமாகிறது.

பெண் அரசுப் பணியாளர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுவது, தாய்மை மற்றும் குழந்தை நலனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. அதேபோன்று, ஆண் அரசுப் பணியாளர்களுக்கும் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு வழங்குவது, குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளவும் குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் உதவும்.

எனவே, இந்தக் கோரிக்கையைத் தமிழக அரசு கனிவுடன் பரிசீலித்து, திருமணமான ஆண் அரசுப் பணியாளர்கள் தங்கள் மனைவியின் மகப்பேறு காலத்தில் உடனிருக்க 15 நாட்கள் விடுப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த விடுப்பைக் குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தோ அல்லது குழந்தை பிறந்த நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள்ளாகவோ எடுத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் வரவேற்பு

ஆண் அரசு ஊழியர்களுக்கான தந்தையர் மகப்பேறு விடுப்பு அறிவிப்புக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

Spread the love