மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே
புதுடெல்லி: ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேல் போரின் தாக்கத்தால் நாடு முழுவதும் எல்பிஜி எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டு மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், நிலைமையை சீராக்க அரசு மும்முரமாக பணியாற்றி வருகிறது என்றும் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “யாரும் பீதியடைய வேண்டாம். ஓட்டல்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது.
இந்த நிலைமையை சீராக்கும் பணியில் அரசு மும்முரமாக பணியாற்றி வருகிறது. சர்வதேச அளவில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு மக்களும் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
போர் மேகம் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள இந்தியர்களை தாயகம் கொண்டு வரும் பணியை மேற்கொண்டு வருகிறோம். அமெரிக்கா – இஸ்ரேல், ஈரான் போரால் நமது தேசம் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியில் மாநில அரசுகளின் ஒத்துழைப்பும் தேவை என நான் கோருகிறேன்.
தேசம் முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களின் உணவக சங்கங்கள் கடிதம் மூலமாகவும், தொலைபேசி வழியாகவும் தொடர்பு கொண்டு காஸ் தட்டுப்பாடு குறித்து எங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
தற்போது ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக சர்வதேச நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நமது நாட்டுக்கு தேவையான கச்சா எண்ணெயை பொறுத்தவரையில் சுமார் 80-90 சதவீதம் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறோம். அது இயற்கை ஆதாரங்களில் ஒன்று.
காஸ் தட்டுப்பாடு விவகாரம் குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரியிடம் பேசி உள்ளேன்” என அவர் கூறினார்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், சமையல் மற்றும் வர்த்தக காஸ் சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஓட்டல்கள் உட்பட பல்வேறு தொழில்கள் ஸ்தம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More Stories
கேரளத்தில் அமைச்சர் புறக்கணிப்பு: பிரதமரின் அரசு நிகழ்ச்சியைப் புறக்கணிக்க பினராயி விஜயன் முடிவு
நாடு முழுவதும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எவ்வளவு நாட்கள் நீடிக்க வாய்ப்பு?
ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியது