March 11, 2026

நாடு முழுவதும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எவ்வளவு நாட்கள் நீடிக்க வாய்ப்பு?

வீடுகளுக்கு அரசு முன்னுரிமை தருவதாக அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேல் போரினால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது எல்பிஜி காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தப் போரின் தாக்கம் இப்போது வீடுகளின் சமையலறை வரை எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

வர்த்தக காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உணவகங்கள் மூடப்படும் நிலை உருவாகி உள்ளது.

இந்நிலையில், வீட்டுத் தேவைக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்துக்கு முன்னுரிமை அளித்து, அதற்கான உற்பத்தி பணி அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும், காஸ் தட்டுப்பாடு எத்தனை காலம் நீடிக்கும் என்பது குறித்தும் இந்திய அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

’இந்தியாவின் தற்போதைய எரிவாயு சிலிண்டர் விநியோக நெருக்கடி என்பது குறுகிய கால அளவில் இருக்கும். ஏனெனில், அண்மையில் அறிவிக்கப்பட்ட விலை உயர்வு காரணமாக நார்வே, அமெரிக்கா போன்ற தொலைதூர பகுதிகளில் இருந்து எரிபொருள் ஆதாரத்தை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பை பொருளாதார ரீதியாக சாத்தியமாகி உள்ளது’ என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், தொலைதூரத்திலிருந்து வரும் இந்த ஆதாரங்களை பெறுவதற்கு சற்று நேரம் எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன் காரணமாக இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எரிவாயு நிரப்பப்பட்ட சரக்கு கப்பல்கள் நார்வே அல்லது அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தடைய சுமார் இரண்டு மாத காலம் ஆகும் என அந்தக் கப்பல் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதோடு, எரிவாயுவை ஆர்டர் செய்வது மற்றும் அதை டெலிவரி பெறும் நடைமுறையும் அடங்கியுள்ளதை சுட்டிக்காட்டி உள்ளனர்.

இருப்பினும், தேசம் எதிர்கொள்ளும் எரிவாயு விநியோக நெருக்கடி நெடுங்காலம் நீடிக்காது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அதே நேரத்தில், இந்த குறுகிய காலத் தட்டுப்பாடு வலி தருவதாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர்.

வீடுகளுக்கு முன்னுரிமை: தேசம் முழுவதும் உள்ள வீடுகளுக்கு இடையூறு ஏதும் இல்லாமல் எல்பிஜி காஸ் சிலிண்டர் விநியோக பணியை மேற்கொள்ள அரசு இந்நேரத்தில் முக்கியத்துவம் அளிக்கிறது. அதேநேரத்தில் வர்த்தக சிலிண்டர் விநியோக பணியை கவனிக்க எண்ணெய் நிறுவனங்களின் சந்தைப்படுத்தல் பிரிவின் செயல் இயக்குநர்கள் மூவர் அடங்கிய குழு ஒன்று திங்கள்கிழமை அமைக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தியாவில், எல்பிஜியைப் பொறுத்த வரையில் சுமார் 80 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் எல்பிஜி தேவையில் 40 சதவீதத்தைக் கத்தார் பூர்த்தி செய்கிறது. ஈரான் தாக்குதல் காரணமாக கத்தாரின் முன்னணி நிறுவனங்கள் எல்பிஜி உற்பத்தி ஆலைகளை மூடிவிட்டன.

மேலும் ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து முடங்கியிருப்பதால் இந்திய பொதுத் துறை, தனியார் நிறுவனங்களால் எல்பிஜியை இறக்குமதி செய்ய முடியவில்லை. பொதுவாக இந்தியாவிடம் சுமார் 21 நாட்களுக்கு தேவையான எல்பிஜி மட்டுமே இருப்பில் வைக்கப்பட்டிருக்கும்.

33 கோடி வீட்டு உபயோக சமையல் காஸ் வாடிக்கையாளர்கள்:

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் 10 நாட்களுக்கு மேலாக நீடிக்கும் நிலையில் இந்தியாவின் எல்பிஜி இருப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இதன் எதிர்விளைவாக நாடு முழுவதும் காஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தொழில், வணிக நிறுவனங்களுக்கான சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் வணிக எல்பிஜி சிலிண்டர்கள் இல்லாமல் ஆயிரக்கணக்கான ஓட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன. மும்பையில் சுமார் 4,000 பெரிய ஓட்டல்களும் ஆயிரக்கணக்கான சிறிய ஓட்டல்களும் செயல்படுகின்றன. வணிக எல்பிஜி தட்டுப்பாடு காரணமாக 50 சதவீத ஓட்டல்கள் மூடப்பட்டு உள்ளன. சென்னை, புனே, கொல்கத்தா, டெல்லி உட்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ஓட்டல் தொழில் முடங்கி வருகிறது.

நாடு முழுவதும் 33 கோடி வீட்டு உபயோக சமையல் காஸ் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அதோடு நாடு முழுவதும் 70.75 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் எல்பிஜி விநியோகிக்கப்படுகிறது. இந்தச் சூழலில் எல்பிஜி காஸ் சிலிண்டர் விநியோகத்தில் வீடுகளுக்கு அரசு முன்னுரிமை அளித்து வருவது அரசு வட்டாரத்தில் இருந்து கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love