கோவை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கோவையில் திமுகவை வெற்றி பெற வைப்பதற்காக செந்தில் பாலாஜியை கோவை தெற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் களத்தில் பயமில்லை. எனக்கு கோவை, கரூர் இரண்டும் ஒன்று தான் என செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளராக செந்தில் பாலாஜி அறிவிக்கப்பட்டுள்ளார். கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட திமுக தேர்தல் அலுவலகத்தை செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மகத்தான வெற்றி பெறும். ஓரணியில் தமிழ்நாடு, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளை சிறப்பாக செய்துள்ளோம்.
செந்தில் பாலாஜி கோவை போட்டி
தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். தமிழக மக்கள் திமுகவுக்கு பிரம்மாண்டமான வெற்றி தரத் தயாராக இருக்கிறார்கள். கடந்தமுறை கோவையின் 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி வாய்ப்பை இழந்திருந்தது. இதனால் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கரூரில் போட்டியிட்ட என்னை கோவையில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளார்.
அவரது ஆணைக்கிணங்க கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் உறுதியாக வெல்ல உழைப்போம். முதலமைச்சர் கோவை வந்தபோது பம்ப்செட் உற்பத்தியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருந்தனர். திமுக தேர்தல் அறிக்கையில் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாடு முழுவதும் 20 லட்சம் விவசாயிகளுக்கு பம்பு செட்டுகள் புதிதாக மாற்றி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பம்ப் செட் உற்பத்தியாளர்கள் வரவேற்றுள்ளனர்.
திமுக திட்டங்கள்
இதுபோன்ற சாதனைகள் காரணமாக கோவை மிகப்பெரிய வளர்ச்சியை அடையும். கோவை தெற்கு தொகுதியை விட்டுவிட்டு வடக்கு தொகுதிக்கு சென்றார்கள்.
எனக்கு கோவை வேறு, கரூர் வேறு அல்ல. கரூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளேன். இப்போது கோவை தொகுதியை எனக்கு வழங்கி இருக்கிறார்கள். அதிலும் வெற்றி பெறுவேன். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சில தொகுதிகளை கோவையில் திமுக இழந்தது.
அதன் பின்பு அதிமுக எந்தளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை அவர்களிடமே கேட்க வேண்டும். பொதுமக்கள் அவர்களை நம்பி கட்சியில் இணைந்து இருக்கிறார்களா. கோவை தெற்கு தொகுதிக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அடுத்தடுத்து அறிவித்து செயல்படுத்துவோம். கோவையில் ஜிடி நாயுடு மேம்பாலம், செம்மொழி பூங்கா திட்டம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். கடந்த ஐந்து வருடங்களில் 8,700 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.
பயமா.. எனக்கா..
இங்கிருந்து கோவை வடக்கு தொகுதிக்கு மாறியவர்களை தான் கேட்க வேண்டும். நான் எந்த வேட்பாளரையும் குறைத்து மதிப்பிடுவதற்காக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தல் களத்தில் பயப்படவும் இல்லை. பின்னோக்கி செல்லவும் இல்லை. நாங்கள் திமுக அரசு மற்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சாதனைகளை எடுத்து கூறுவோம். அதனால் பலனடைந்த மற்றும் பலனடைய போகும் பயனாளிகளை எங்களுக்கு ஆதரவான வாக்குகளாக மாற்றுவோம்” என்றார்

More Stories
திமுகவுக்கு தடை இல்லை; எங்களுக்கு அனுமதியே இல்லை – தவெக நிர்வாகிகள் புகார்
பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு.. அண்ணாமலை பெயர் இடம்பெறுமா? டெல்லிக்கு போன ரிப்போர்ட்!
சென்னை மாவட்டத்தில் 47 வேட்புமனுக்கள் தாக்கல்: முதல் நாளிலேயே குவிந்த வேட்பாளர்கள்