சென்னை: ஞாயிற்றுக்கிழமை அன்று சிஎஸ்கே அணியை 43 ரன்களில் வீழ்த்தியது ஆர்சிபி. இந்த தோல்விக்கு தானே காரணம் என பொறுப்பேற்றுள்ளார் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.
நடப்பு ஐபிஎல் சாம்பியனான ஆர்சிபி உடன் பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் சிஎஸ்கே விளையாடியது. 251 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கே, 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது இந்த சீசனில் அந்த அணிக்கு ஹாட்ரிக் தோல்வியாக அமைந்தது. கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே-வுக்கு இது 7-வது தொடர் தோல்வியாக அமைந்தது.
டாப் ஆர்டரில் இந்திய பேட்ஸ்மேன்கள் உடன் இந்த சீசனில் விளையாடி வருகிறது. சஞ்சு சாம்சன், கேப்டன் ருதுராஜ், ஆயுஷ் மாத்ரே என மூவரும் ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.
தோல்விக்கு பிறகு ருதுராஜ் கூறியதாவது: “நாங்கள் பேட் செய்தபோது எனது பங்களிப்பை சற்று கூடுதலாக வழங்கியிருந்தால் நிச்சயம் இந்த ஆட்டத்தின் முடிவு மாறி இருக்கக்கூடும். இன்றைய ஆட்டத்தில் எங்கள் தோல்விக்கு நானே காரணம்.
200+ ரன்களை நாங்கள் எட்டியது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. சர்பராஸ் கான், பிரஷாந்த் வீர், ஜேமி ஓவர்டன் ஆகியோர் சிறப்பாக களத்தில் செயல்பட்டனர். துபேவும் தன்னால் முடிந்ததை செய்தார்.
இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் டிம் டேவிட் விக்கெட்டை கிட்டத்தட்ட வீழ்த்தி விட்டோம். ஆனால், அது நோ-பால் ஆக அமைந்தது. அதே போல விராட் கோலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை நழுவவிட்டோம். அதை பிடித்திருந்தால் ஆட்டத்தின் கட்டுப்பாடு எங்கள் வசம் இருந்திருக்கும். முதல் இன்னிங்ஸில் 13-14 ஓவர்கள் வரை ஆட்டம் எங்கள் வசம் இருந்தது. அதன் பின்னர் அதன் போக்கு மாறியது” என்றார்.
வரும் 11-ம் தேதி அன்று சென்னை – சேப்பாக்கத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை சிஎஸ்கே எதிர்கொள்ள உள்ளது. இந்த சீசனில் சென்னை அணி நான்காவது தோல்வியை தவிர்க்கும் வகையில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More Stories
‘ஓவர்சீஸ்’ பிளேயர் எனும் விமர்சனம் – விராட் கோலி விளக்கம்!
ஐபிஎல் தொடர்களில் சேசிங் கிங்ஸ் ஆன பஞ்சாப் கிங்ஸ்!
சேப்பாக்கத்தில் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் சிஎஸ்கே தோல்வி: புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்