April 13, 2026

திருப்பரங்குன்றம் விவகாரம்: அவமதிப்பு வழக்கை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை – பின்னணி என்ன?

திருப்பரங்குன்றம் விவகாரத்தின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் விசாரிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

”திருப்பரங்குன்றம் மக்களின் விருப்பத்தை காலம் காலமாக திமுக பாதுகாத்து வருகிறது, அந்த வகையில் இந்த இடைக்கால உத்தரவு வரவேற்க கூடியது,” என்றார் திமுக செய்தி தொடர்பு தலைவர் டி கே எஸ் இளங்கோவன்.

ஆனால், ”இந்த இடைக்கால உத்தரவு தற்காலிகமானதுதான். அதில் திமுக கொண்டாட எதுவுமில்லை.” என்கிறார் அதிமுக செய்தித்தொடர்பாளர் கோவை சத்யன்

தனி நீதிபதி விசாரிக்க இடைக்கால தடை

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 6 பேர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம். ஜோதிராமன் ஆகியோர் கொண்ட அமர்வு “நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்தனர்.

”நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி விசாரிக்கலாமா அல்லது இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டுமா என்பது குறித்து நீதிமன்றம் உரிய முடிவு எடுக்கும். அதுவரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி விசாரிக்க இடைக்கால தடை விதிக்கப்படுவதாக” அந்த உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்தனர்.

‘சகோதரத்துவத்தோடு இருக்கவே முயல்கிறோம்’

ராம ரவிக்குமார்
படக்குறிப்பு,திருப்பரங்குன்றம் தீபம் வழக்கின் மனுதாரர், இந்து தமிழர் கட்சித் தலைவர், ராம ரவிக்குமார்

”இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரு உத்தரவை பிறப்பிக்கும் போது அதனை நாங்கள் விமர்சிக்கவில்லை, மாறாக தனி நீதிபதி ஒரு உத்தரவை பிறப்பித்தால் நீதிபதியை விமர்சனம் செய்கின்றனர்,” என்கிறார் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடுத்த இந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் ராம ரவிக்குமார்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற கூடாது என அதனை நீர்த்து போக செய்யும் நடவடிக்கைகளையே இதுபோன்ற மேல்முறையீடுகள் மூலம் அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இது ஓட்டு அரசியலை மையப்படுத்தி திமுக செய்யும் செயல்முறை” என்றார் அவர்

மேலும் பேசிய அவர், “திருப்பரங்குன்றத்தில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணக்கமாகதான் இருக்கிறார்கள் எங்களுக்குள் பிரச்னைகளை தூண்டிவிடுவதே திமுகவினரும் அதன் கூட்டணி கட்சியினரும்தான்” என்று கூறினார்.

Spread the love