April 23, 2026

சொந்த ஊருக்கு போக பேருந்து இல்லை.. பூவிருந்தவல்லி–காஞ்சிபுரத்தில் வாக்காளர்கள் சாலைமறியல்!

பூவிருந்தவல்லியில் இருந்து காஞ்சிபுரம் செல்ல பேருந்துகள் இல்லை என பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23) அதிகாலை முதலே அமைதியாக தொடங்கியது. மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக உள்ளிட்ட நான்கு முக்கிய அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மொத்தம் 4,023 வேட்பாளர்கள் 234 தொகுதிகளில் களமிறங்கியுள்ளனர். பல இடங்களில் முக்கிய தலைவர்கள் போட்டியிடுவதால் சில தொகுதிகள் கவனம் ஈர்த்துள்ளன.

  

அதிமுக செஞ்சதை கூட திமுக MLA D Velu செய்யல! மூன்று ஆண்டுகளாக போராடுறோம்!
சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் எளிதாக வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும் கொரோனா கால அனுபவத்தை கருத்தில் கொண்டு சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சில இடங்களில் பின்பற்றப்படுகின்றன. மாலை வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பின்னர் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக சேமித்து, எண்ணிக்கை நடைபெறும் நாளில் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

தேர்தலில் வாக்களிக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக புகார் கட்டுப்பாட்டு அறை வைக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்னாயக் தெரிவித்து இருந்தார்.

வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக, மாநில அரசின் சார்பில் நேற்று முதல் நாளை வரை சென்னை நகரிலிருந்து மொத்தம் 11,323 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார். இது 2024 மக்களவைத் தேர்தலின்போது இயக்கப்பட்ட 10,214 பேருந்துகளை விட அதிகமான எண்ணிக்கையாகும்.

மேலும், தெற்கு ரயில்வே சார்பிலும் சென்னையிலிருந்து பிற நகரங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு, அதேபோல் அங்கிருந்து மீண்டும் சென்னை நோக்கியும் வரும் 28ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன
இந்த சூழலில், வாக்களிக்க தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக
பூவிருந்தவல்லி – காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் வாக்களிக்க செல்ல பொதுமக்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் பதற்றம் நிலவியது. பூவிருந்தவல்லி பகுதியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி செல்ல வேண்டிய பலர் குறிப்பாக வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்ல முயன்றவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்துகள் வராததாக குற்றம்சாட்டினர்.

இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். பேருந்துகள் போதுமான அளவில் இயக்கப்படவில்லை. நேரத்திற்கு சேவை கிடைக்கவில்லை என்று அவர்கள் புகார் தெரிவித்தனர். இந்த சாலைமறியல் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து சில நேரம் பாதிக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி. கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து மக்கள் சாலைமறியலை கைவிட்டனர். இந்த சம்பவம், தேர்தல் காலத்தில் போக்குவரத்து ஏற்பாடுகளில் ஏற்பட்ட குறைபாடுகளை வெளிக்கொணர்ந்ததாக பார்க்கப்படுகிறது

Spread the love