சென்னை: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமாக திகழ்ந்த மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே ஆகிய இரு அணிகளும், நடப்பு சீசனில் தடுமாறி வருகின்றன. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி 8 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 5 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. கடைசியாக சிஎஸ்கே அணி, குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது.
நடப்பு சீசனில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் சீரற்றதாக உள்ளது, குறிப்பாக மிடில் ஓவர்களில் தடுமாற்றம் காணப்படுகிறது. ஒரு போட்டியில் அபாரமாக விளையாடுவதும், அடுத்த போட்டியில் அப்படியே சரிவதும் அந்த அணியின் பிளே-ஆஃப் வாய்ப்புகளை கேள்விக்குறியாக்கியுள்ளது. அணியின் ஒட்டுமொத்த பேட்டிங்கும் சஞ்சு சாம்சனை மட்டுமே நம்பி உள்ளது.
அவர், விரைவிலேயே ஆட்டமிழந்தால் பொறுப்புடன் விளையாடி அணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லக்கூடிய வீரர்கள் இல்லை. மேலும் காயம் காரணமாக ஆயுஷ் மாத்ரே விலகி உள்ளது நடுவரிசை பேட்டிங்கையும் வெகுவாக பாதித்துள்ளது. கடந்த சீசன்களில் அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே, டெவால்ட் பிரேவிஸ் ஆகியோரிடம் இருந்து இதுவரை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை.
சர்ஃபராஸ் கான் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரிவர பயன்படுத்திக்கொள்ளவில்லை. அவசர கதியில் விளையாடி ஆட்டமிழப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதே நிலைதான் கார்த்திக் சர்மாவுக்கும். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அவரால் ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்த முடியவில்லை. கடந்த ஆட்டத்தில் களமிறக்கப்பட்ட உர்வில் படேல் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இதுஒருபுறம் இருக்க ருதுராஜ் கெய்க்வாட் பார்முக்கு திரும்பி இருப்பது நம்பிக்கை அளிக்கக்கூடும். குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 60 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்த அவரிடம் இருந்து மேலும் சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். 2 சதங்கள் அடித்துள்ள சஞ்சு சாம்சனும் மட்டையை சுழற்றக்கூடும். பந்துவீச்சில் ஜேமி ஓவர்டன், அன்ஷுல் கம்போஜ், அகீல் ஹோசைன், நூர் அகமது ஆகியோர் நம்பிக்கை அளிக்கக்கூடும்.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 6 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. மும்பை அணியும் இந்த சீசனில் நிலையற்ற ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. அவர்களின் டாப்-ஆர்டர் பேட்டர்கள் அவ்வப்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், பலவீனமான மிடில்-ஆர்டர் ஏமாற்றத்தையே அளித்துள்ளது.
சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா போன்ற வீரர்கள் சில போட்டிகளில் கைகொடுத்தாலும், ஒட்டுமொத்தமாக மிடில்-ஆர்டர் சீராக ரன் குவிக்கத் தவறிவிட்டது. இது பினிஷிங் செய்யும் போது பெரும் அழுத்தத்தை உருவாக்குகிறது. இதேபோன்று பந்து வீச்சில் இக்கட்டான நேரங்களில் ரன்களைக் கட்டுப்படுத்தவோ அல்லது நிர்ணயித்த இலக்கைத் தக்கவைப்பதிலோ பந்துவீச்சாளர்கள் திணறி வருகின்றனர்.
மும்பை அணி தனது கடைசி ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. அந்த ஆட்டத்தில் மும்பை அணி 243 ரன்களை குவித்த போதிலும் வெற்றியை வசப்படுத்த முடியாமல் போனது. அந்தப் போட்டியில் மும்பை அணியின் பந்துவீச்சுப் பிரிவின் பலவீனங்கள் அப்பட்டமாக வெளிப்பட்டன. ஜஸ்பிரீத் பும்ரா 4 ஓவர்களை வீசி விக்கெட் ஏதுமின்றி 54 ரன்களை வாரி வழங்கினார். அஷ்வனி குமார் 2 ஓவர்களில் 41 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கும் மும்பை அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற வேண்டுமானால் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 6 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். இதில் ஒரு போட்டியில் தோற்றால் கூட, மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புக்காக ரன் ரேட்டையும், மற்ற அணிகளின் வெற்றி, தோல்வி முடிவுகளையும் பெரிதும் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும்.
நடப்பு சீசனில் சிஎஸ்கே – மும்பை அணிகள் 2-வது முறையாக மோத உள்ளன. கடந்த ஏப்ரல் 23-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியிருந்தது. இந்த ஆட்டத்தில் 208 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை அணி 104 ரன்களுக்கு ஆட்டமிழந்து இருந்தது. இந்த தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுக்க மும்பை அணி முயற்சிக்கக்கூடும்.
சேப்பாக்கத்தில்…
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே – மும்பை அணிகள் 9 முறை மோதி உள்ளன. இதில் மும்பை அணி 5 ஆட்டங்களிலும், சிஎஸ்கே அணி 4 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளன. தற்போது 10-வது முறையாக இரு அணிகளும் இந்த மைதானத்தில் மோத உள்ளன.

More Stories
போட்டி நடைபெறும் நாட்களில் தோனி ஏன் களத்துக்கு வருவதில்லை? – மைக்கேல் ஹஸ்ஸி விளக்கம்
400 ரன்களை விரைந்து எட்டி சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி: ஆரஞ்சு தொப்பியை வசமாக்கினார்
ஐபிஎல் கிரிக்கெட்டில் மிக குறைந்த ரன்களில் ஆல் அவுட்டான 5 அணிகள்: முதலிடத்தில் ஆர்சிபி