சர்வதேச வர்த்தக விதிகளையும், ராஜதந்திர உறவுகளையும் அமெரிக்காவுக்கே முதலிடம் (America First) என்ற தனது தனிப்பட்ட கொள்கையின் மூலம் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அடியோடு மாற்றி எழுதி வருகிறார்.
2026ம் ஆண்டின் தொடக்கத்தில் அவர் விதித்த அதிரடி வர்த்தக வரிகளும், ஈரான் தொடர்பான போர் பதற்ற அறிவிப்புகளும் உலகப் பங்குச் சந்தைகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடும் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியுள்ளன.
இந்தச் சூழலில், அமெரிக்காவின் பிடியில் இருந்து நழுவி வரும் உலகத் தலைமைப் பொறுப்பை சீனா ஏற்க வேண்டும் என்ற ஸ்பெயினின் பகிரங்கக் கோரிக்கை, புதிய புவிசார் அரசியல் மாற்றத்திற்கும் வலுவான அறைகூவலுக்கும் வித்திட்டுள்ளது.
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் சில கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, 2026 பிப்ரவரியில் இறக்குமதி பொருட்களுக்கு 10 % முதல் 15 % வரை ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி வரி விதித்தது. இந்த அறிவிப்பு மட்டுமின்றி ஈரான் போர் தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் பெரும்பாலும் வெள்ளிக்கிழமை சந்தை முடியும் நேரத்திலோ அல்லது வார இறுதி நாட்களிலோ வெளியாவது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதுபோன்ற அறிவிப்புகள் ட்ரம்ப் நிர்வாகம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தித் தனக்கு நெருக்கமானவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறது எனற குற்றச்சாட்டு எழுந்துள்ளதுடன் சாதாரண முதலீட்டாளர்களின் நம்பிக்கையைச் சிதைப்பதாக உள்ளது என பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சந்தை விடுமுறை நாட்களில் வெளியிடப்படும் இந்த அறிவிப்புகளின் தாக்கம் குறித்து முன்கூட்டியே தெரிந்த ‘உள்வட்டாரங்கள்’ (Insiders), திங்கட்கிழமை சந்தை மீண்டும் திறக்கும்போது பல மில்லியன் டாலர் லாபத்தை ஈட்டியதாக புகார் எழுந்துள்ளது.
உதாரணமாக, கடந்த பிப்ரவரி 23 திங்கட்கிழமை அன்று, அமெரிக்கப் பங்குச் சந்தைகளான எஸ்&பி 500 மற்றும் நாஸ்டாக் ஆகியவை கடும் சரிவைச் சந்தித்தன. இந்த வீழ்ச்சியை முன்கூட்டியே கணித்து ‘ஷார்ட் செல்லிங்’ செய்த ட்ரம்ப் ஆதரவு நிறுவனங்கள், சுமார் 80 மில்லியன் முதல் 120 மில்லியன் டாலர் வரை லாபம் பார்த்ததாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ரிச்சிடோரஸ் தாக்கல் செய்த அறிக்கை அதிரவைக்கிறது.
ஈரான் மீதான தாக்குதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை தொடர்பான ட்ரம்ப்பின் அறிவிப்புகள் சர்வதேச எரிசக்தி சந்தையை நிலைகுலையச் செய்துள்ளன. ஏப்ரல் 7-ம் தேதி ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 8.3% உயர்ந்தது. வியப்புக்குரிய வகையில், இந்த அறிவிப்புக்குச் சில நிமிடங்களுக்கு முன்பாகவே சுமார் 2.4 பில்லியன் டாலர் மதிப்பிலான எண்ணெய் ஒப்பந்தங்கள் வர்த்தகம் செய்யப்பட்டது சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இது குறித்து விசாரிக்க முற்பட்ட பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்புகளை, நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தி ட்ரம்ப் முடக்குவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கிரிப்டோ கரன்சி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான பல முக்கியமான அமலாக்க நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன அல்லது கைவிடப்பட்டுள்ளன. இது பிடிக்காமலேயே நேர்மையான அதிகாரியாகக் கருதப்பட்ட எஸ்இசி அமலாக்கப் பிரிவு இயக்குநர் மார்கரெட் ஆர். ரையான் கடந்த மார்ச் 16-ல் திடீரென ராஜிநாமா செய்ததாகவும் கூறப்படுகிறது.
செனட்டர் எலிசபெத் வாரன் மேக்சின் வாட்டர்ஸ் போன்ற முக்கியத் தலைவர்கள், இந்த ராஜிநாமா குறித்து விரிவான அறிக்கை கேட்டு எஸ்இசி தலைவர் பால் அட்கின்ஸுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடும் விவாதங்கள் நடந்து வருகின்றன.
நாட்டின் உச்ச அதிகார மையங்களுடன் தொடர்புடையவர்கள் ஈட்டும் ஒவ்வொரு பில்லியன் டாலர் லாபமும், கோடிக் கணக்கான சாமானிய மக்களின் உழைப்பிலிருந்து பிடுங்கப்படும் ஒரு மறைமுகமான வரியாகவே பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் இந்த கண்ணியமற்ற கணிக்க முடியாத போக்கினால் அதிருப்தியடைந்துள்ள பல ஐரோப்பிய நாடுகள், தற்போது ஆசியாவின் பக்கம் திரும்பத் தொடங்கியுள்ளன. சமீபத்தில் பெய்ஜிங்குக்குப் பயணம் மேற்கொண்ட ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், அமெரிக்கா விட்டுச் சென்ற தலைமைத்துவ வெற்றிடத்தை சீனா நிரப்ப வேண்டும் என்று பகிரங்கமாகவே அழைப்பு விடுத்தது சர்வதேச அரசியலில் ஒரு மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது.
அதற்கு ஏதுவாக, நேட்டோ அமைப்பில் உள்ள ஒரு முக்கிய நாடான ஸ்பெயின், சீனாவுடன் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய பசுமை ஆற்றல் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இது அமெரிக்க டாலரின் வலிமையைக் குறைக்கும் ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவே வல்லுநர்களால் கருதப்படுகிறது.
2026ம் ஆண்டு என்பது உலக வல்லரசு வரிசையில் ஒரு பெரிய இடமாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாக அமையும் என்பது சர்வதேச வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது. நிலையான, கணிக்கக்கூடிய ஒரு பொருளாதாரத் தலைமையை நோக்கிய உலக நாடுகளின் தேடல் அதிகரித்துள்ளது. அது சீனாவை உலக அரங்கில் முன்னிறுத்துவதாக அமையுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

More Stories
“ஈரான் முன்மொழிந்துள்ள நிபந்தனைகள் ஏற்புடையவை அல்ல” – ட்ரம்ப்
“மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தயார்” – ஈரானிடம் புதின் உறுதி
ஈரான் – அமெரிக்கா இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தை மறுப்பு: பாகிஸ்தானில் தொடரும் ராஜதந்திர நகர்வுகள்!