May 12, 2026

கதர் பார்ட்டி வாரிசு எம்.பி.க்கு தலைக்கு மேல் தொங்கும் கத்தி | உள்குத்து உளவாளி

இரண்டெழுத்து தேசத்து ஆட்கள் 50 பேருக்கு குறுக்கு வழியில் விசா வாங்கிக் கொடுத்த வழக்கில் கதர் பார்ட்டியின் வாரிசு எம்.பி.க்கு தலைக்கு மேல் கத்தி தொங்குகிறதாம். சிபிஐ விசாரிக்கும் இந்த வழக்கில் வலுவான ஆதாரங்கள் சிக்கி இருப்பதால் தம்பிக்கு இன்னும் 6 மாதங்களுக்குள் கண்டம் நிச்சயம் என்கிறார்கள்.

அதற்குள்ளாக பாஜக-வின் ‘வாஷிங் மெஷின்’ பிராசஸுக்குள் போனால் தான் தலை தப்பிக்க முடியுமாம். இதனிடையே, தேர்தலுக்கு முன்பே கதர் பார்ட்டியை விசில் பார்ட்டியுடன் சேரவிடாமல் தடுத்ததைச் சுட்டிக்காட்டி, ‘சீமைத்’ தொகுதி கதர்பார்ட்டிகளே ‘தகப்பன் சாமியை’ சோஷியல் மீடியாவில் மானாங்கன்னியாக வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘தேர்தலுக்கு தேர்தல் கட்சிக்கு பாதகமான நடவடிக்கையில் ஈடுபட்டு கட்சியை அழிக்கிறீர்கள். மேற்கு வங்கத்தில் கட்சி தலைமைக்கு எதிராக வழக்காடுகிறீர்கள். இந்தத் தேர்தலில் தவெக-வுடன் கூட்டணி வைத்து 40 முதல் 50 எம்எல்ஏ-க்கள் வென்று, துணை முதல்வர் உள்ளிட்ட 7 அமைச்சர்கள் பதவிகளும் காங்கிரஸுக்கு கிடைப்பதை கெடுத்தீர்கள்.

அதற்குக் காரணம், உங்களைவிட யாரும் உச்ச பதவிக்கு வந்துவிடக் கூடாது என்பதால் தானே. காங்கிரஸ் கட்சியை உங்கள் வீட்டு ஃபிரிட்ஜுக்குள் வைத்து பாதுகாக்கிறீர்கள். நீங்கள் போட்டியிடும் தேர்தல் வந்தால் மட்டும் அதை சூடுபடுத்தி பயன்படுத்திவிட்டு மீண்டும் ஃபிரிட்ஜுக்குள் வைத்துவிடுகிறீர்கள்.

இப்படியே, சொந்த மாவட்டத்தில் கட்சிக்கென இருந்த ஒரே எம்எல்ஏ-வையும் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பியது தான் நீங்கள் செய்த சாதனை. நீங்களும் இனிமேல் தொகுதியை விட்டு கெட்டவுட் ஆகிவிடுங்கள்’ என தைரியமாக தங்களின் பெயர்களைப் போட்டே பதிவுகளைப் போட்டு வருகிறார்கள்.

அப்பாவும் பிள்ளையும் தொகுதிப் பக்கம் வந்தால் கறுப்புக் கொடி காட்டி களேபரம் செய்யப் போவதாகவும் சிலர் ‘கலகப்’ பிரச்சாரமும் செய்து கொண்டிருக்கிறார்களாம்.

Spread the love