May 18, 2026

விஜய்க்கு கை கொடுத்த காங்கிரஸ்… உடையும் இண்டியா கூட்டணி?

சென்னை: தமிழகத்​தில் தவெக தலை​வர் விஜய்யை முன்​னிறுத்தி காங்​கிரஸ் ஆடும் அரசி​யல் ஆட்​டம், தேசிய அரசி​யலில் பெரும் தாக்​கத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதன் விளை​வாக காங்​கிரஸ் இல்​லாத மூன்​றாவது அணியை உரு​வாக்க எதிர்க்​கட்​சிகள் தயா​ராகி வரு​கின்​றன.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்​தலில் தவெக 108 இடங்​களைப் பிடித்​தது. ஆட்​சி​யமைக்க பெரும்​பான்மை இல்​லாமல் தவித்​துக்​கொண்​டிருந்த அக்​கட்​சிக்கு கை கொடுத்​தது காங்​கிரஸ். இதற்​கு, “தமிழகத்​தில் பாஜக வந்​து​விடக்​கூ​டாது என்​ப​தற்​காகவே இந்த முடிவை எடுத்​திருக்​கிறோம்” என்​கிறது காங்​கிரஸ்.

ஆனால், “இரண்டு அமைச்​சரவை இடங்​களுக்கு ஆசைப்​பட்டு முதுகில் குத்​தி​விட்​டது” என திமுக​வினர் கொதிக்​கிறார்​கள். இதனால் தேசிய அளவில் ‘இண்​டி​யா’ கூட்​ட​ணி​யில் பெரும் விரிசல் ஏற்​பட்​டுள்​ளது. இதன் முதல் கட்​ட​மாக, நாடாளு​மன்ற மக்​களவை​யில் தங்​களது எம்​.பி.க்​களின் அமரும் இடத்தை மாற்றி அமைக்​கக் கோரி திமுக தரப்​பில் சபா​நாயகர் ஓம் பிர்​லா​வுக்கு கனிமொழி கடிதம் எழுதினார்.

அதே​நேரத்​தில் மேற்கு வங்​கம், கேரளா போன்ற மாநிலங்​களில் பிராந்​திய கட்​சிகளும் காங்​கிரஸும் எதிரெ​தி​ராக மோதிக்​கொண்​டாலும், தேசிய அளவில் கூட்​ட​ணி​யில் நீடிப்​ப​தைப்​போல தமிழகத்​தி​லும் தொடரலாம் என காங்​கிரஸ் கணக்கு போட்​டது. ஆனால், நாடாளு​மன்​றத்​தில் கூட காங்​கிரஸுடன் ஒட்டி அமர திமுக விரும்​ப​வில்​லை.

சபா​நாயகருக்கு எழு​திய கடிதத்​தில் திமுக எம்பி கனி​மொழி, “மாறிவரும் அரசி​யல் சூழல்​களின் காரண​மாக​வும், காங்​கிரஸுட​னான கூட்​டணி முடிவுக்கு வந்​து​விட்​ட​தா​லும், அவை​யில் அவர்​களுக்கு அரு​கில் அமர்​வது உசிதமல்ல. திமுக உறுப்​பினர்​கள் தங்​களது கடமை​களை சரி​யாகச் செய்ய ஏது​வாக தனி அமரும் வசதி செய்து தரப்பட வேண்​டும்” எனக் குறிப்​பிட்​டுள்​ளார். மம்தா பானர்ஜி போன்ற தலை​வர்​கள் ‘இண்​டி​யா’ கூட்​ட​ணியை மீண்​டும் பலப்​படுத்த முயலும் வேளை​யில், இந்த விரிசல் காங்​கிரஸுக்கு பின்​னடைவை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

சமீபத்​தில் சமாஜ்​வாடி கட்​சித் தலை​வர் அகிலேஷ் யாதவ் கொல்​கத்தா சென்று மம்தா பானர்​ஜியை சந்​தித்​ததுடன், ஸ்டா​லின் மற்​றும் மம்​தாவுடன் இருக்​கும் படங்​களைப் பகிர்ந்​து, “கடின​மான காலங்​களில் ஒரு​வரை ஒரு​வர் கைவிடு​பவர்​கள் நாங்​கள் அல்ல” என எக்ஸ் தளத்​தில் பதி​விட்​டுள்​ளார். இது காங்​கிரஸுக்கு விடுக்​கப்​பட்ட மறை​முக எச்​சரிக்​கை​யாகவே பார்க்​கப்​படு​கிறது.

இதுகுறித்து இண்​டியா கூட்​டணி தலை​வர்​கள், “பாஜகவை வீழ்த்த எதிர்க்​கட்​சிகள் ஒன்​றாக இருக்க வேண்​டும். ஆனால் கூட்​டணி கட்​சிகளுடன் காங்​கிரஸ் முரண்​படு​கிறது. மேற்கு வங்​கத்​தில் மம்​தா, ஜம்மு காஷ்மீரில் உமர் அப்​துல்​லா, ஜார்​கண்ட் ஹேமந்த் சோரன், டெல்லி அரவிந்த் கேஜ்ரி​வால், உபி​யில் அகிலேஷ் யாதவுடன் என காங்​கிரஸ் மோதல் போக்கை கடைபிடிக்​கிறது. இப்​போது திமுக​வுட​னும் பிரச்​சினையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதனால் காங்​கிரஸ் இல்​லாத ஒரு மூன்​றாவது அணியை உரு​வாக்க மற்ற எதிர்க்​கட்​சிகள் தயா​ராகி வரு​கின்​றன.

முன்​பெல்​லாம் இண்​டியா கூட்​ட​ணி​யின் தலை​மைப் பொறுப்பை மாநிலக் கட்​சிகளின் தலை​வர்​களிடம் ஒப்​படைக்க வேண்​டும் என்ற கோரிக்கை எழுந்​தால், காங்​கிரஸுக்கு ஆதர​வாக திமுக நிற்​கும். தற்​போது அது​வும் இல்​லாமல் ஆகி​விட்​டது” என்​றனர்.

இது குறித்து காங்​கிரஸ் வட்​டாரங்​கள் கூறுகை​யில், “தமிழகத்​தில் மதவாத சக்​தி​கள் கால் பதிப்​ப​தைத் தடுப்​ப​தற்​காகவே இந்த கருத்​தி​யல் மாற்​றம் என வெளி​யில் சொன்​னாலும், உண்​மை​யில் திமுக கூட்​ட​ணி​யில் இருந்து வெளி​யேற காங்​கிரஸ் நீண்ட நாட்​களாகவே சமயம் பார்த்​துக் கொண்​டிருந்​தது.

திமுக கூட்​ட​ணி​யில் தங்​களுக்கு உரிய மரி​யாதை கிடைப்​ப​தில்லை என்​றும், ஆட்சி மற்​றும் அதி​காரத்​தில் பங்கு தர திமுக மறுப்​ப​தாக​வும் காங்​கிரஸின் அடிமட்​டத் தொண்​டர்​கள் தொடர்ந்து தலை​மைக்கு அழுத்​தம் கொடுத்து வந்​தனர். இதன் விளைவே இந்த வில​கல். மேலும் தமிழக அரசி​யலின் எதிர்​காலம் இனி விஜய் தான் என்​பதை உணர்ந்தே காங்​கிரஸ் இந்த முடிவை எடுத்​துள்​ளது” என்​றனர்.

இதற்​கிடை​யில் சமீபத்​தில் நடை​பெற்ற கூட்​டம் ஒன்​றில் பேசிய ராகுல் காந்​தி, “நாட்​டில் ஆர்​எஸ்​எஸ், காங்​கிரஸ் ஆகிய இரு வேறு கொள்​கைகள் மட்​டுமே பிர​தான​மாக உள்​ளன. மற்ற கட்​சிகளால் இவற்​றுக்கு முன்​னால் நிற்க முடி​யாது. இறு​தி​யில் காங்​கிரஸ்​தான் பாசிச சக்​தி​களை வீழ்த்​தும்” என மற்ற கட்​சிகளை மறை​முக​மாகத் தாக்​கிப் பேசி பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளார். தமிழகத்​தில் தொடங்​கி​யுள்ள இந்த ‘விஜய்​-​காங்​கிரஸ்’ புதிய அரசி​யல் அத்​தி​யா​யம், தேசிய அரசி​யலின் சதுரங்க ஆட்​டத்​தையே மாற்​றியமைக்​கத் தொடங்​கியுள்​ளது.

Spread the love