திருமலை: கோடை விடுமுறை இன்னும் சில நாட்களில் நிறைவடைந்து ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் படை எடுத்து வருகின்றனர். இதனால் சர்வ தரிசனம் வாயிலாக ஏழுமலையானை தரிசிக்க 28 மணி முதல் 30 மணி நேரம் வரை ஆகிறது.
நேற்று மாலை வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் இரண்டும் நிறைந்து, சிலா தோரணம் வரை, 5 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். இவர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு, குடிநீர், மோர், டீ போன்றவற்றை ஸ்ரீவாரி சேவகர்கள் மூலம் இலவசமாக வழங்கி வருகிறது.
ஆயினும் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நேற்று மாலை முதல் இன்று காலை 9 மணி வரை சர்வ தரிசனத்திற்கு தற்காலிகமாக பக்தர்கள் அனுமதி இல்லை என்று தேவஸ்தானம் அறிவித்தது. இதன் காரணமாக நேற்று மாலை 4 மணிக்கு மேல் சர்வ தரிசன கேட் அருகே வந்த பக்தர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
கூட்டம் அதிகரிப்பால், திருமலையில் அறைகள் கிடைக்காமல் கோயிலுக்கு வெளியிலும் நடைபாதைகளிலும் பக்தர்கள் தங்கி உள்ளனர். பலர் திருமலை பேடி ஆஞ்சநேயர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, அங்கேயே வழிபட்ட பின் ஊர் திரும்புகின்றனர்.
தலைமுடி காணிக்கை செலுத்தும் இடமான கல்யாண கட்டா, லட்டு பிரசாத விநியோக மையம், அலிபிரி வாகன சோதனைச் சாவடி, திருமலை பஸ் நிலையம், பாபவிநாசம், வராகர் திருக்கோயில் போன்ற இடங்களிலும் பக்தர்களின் கூட்டம் மிக அதிகமாக உள்ளது.
திருமலையில் மட்டுமின்றி, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், கோவிந்தராஜ பெருமாள் கோயில், கபிலதீர்த்தம், ஸ்ரீ காளஹஸ்தி கோயில், காணிப்பாக்கம் விநாயகர் கோயில் என திருப்பதி, சித்தூர் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

More Stories
வடபழனி முருகன் கோயிலில் கொடியேற்றத்துடன் வைகாசி விசாக பிரம்மோற்சவம் கோலாகலத் தொடக்கம்
பழனி முருகன் கோவில் அக்னி நட்சத்திரம் திருவிழா பக்தர்கள் மலை கோவிலை கிரி சுற்றி வலம் வந்தனர்
திருப்பதி கோயிலில் 2.45 லட்சம் பக்தர்கள் தரிசனம்: ரூ.12 கோடி உண்டியல் காணிக்கை