May 22, 2026

“யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்” – திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை

அமைச்சர்களான வன்னியரசு, ஷாஜஹானுக்கு வாழ்த்து!

சென்னை: தமிழக அமைச்சர்களாக இன்று பதவியேற்ற விசிக எம்எல்ஏ வன்னியரசுக்கும், ஐயூஎம்எல்ஏ ஷாஜஹானுக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கூடவே, அவர்கள் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றது குறித்து கடுஞ்சொற்களால் விமர்சிக்க வேண்டாம் என்று திமுகவினருக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் வன்னியரசுக்கும், ஷாஜஹானுக்கும் எனது வாழ்த்துகள்!

தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே திமுகவினர் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.

அண்ணா வழியிலும், கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்க உரிமை கோரியது. ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களுக்காக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெற்றது.

ஆரம்பத்தில் விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு என்று அறிவித்த நிலையில் தவெகவின், முதல்வர் விஜய்யின் கோரிக்கைகளை ஏற்று இரண்டு கட்சிகளும் அமைச்சரவையில் இணைந்தன.

இதனையடுத்து, விசிகவின் வன்னியரசு, ஐயூஎம்எல் கட்சியின் ஷாஜஹானுக்கு அமைச்சர்களாக, இன்று ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவர்களுக்கான இலாகாவும் ஒதுக்கப்பட்டது. அதன்படி, ஐயூஎம்எல் கட்சியின் ஷாஜஹான் சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும், விசிகவின் வன்னியரசு சமூகநீதித் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

தவெக அமைச்சரவையில் விசிக, ஐயூஎம்எல் இடம்பெறும் என்ற அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் நேற்று பின்னிரவில் திமுக எம்.பி. ஆ.ராசா ஒரு ட்வீட்டை பதிவு செய்து பின்னர் அதை நீக்கினார். இருப்பினும் அதன் ஸ்க்ரீன்ஷாட்கள் இணையத்தில் உலாவி திமுகவுக்கு வசைகளைப் பெற்றுத் தந்து கொண்டிருக்கின்றன. தொடர்ந்து இன்று காலையில் மற்றுமொரு ட்வீட்டையும் அவர் பதிவு செய்தார்.

இந்தச் சூழலில்தான் திமுக தலைவர் ஸ்டாலின் விசிக, ஐயூஎம்எல் கட்சிகளை கொள்கை தோழனை என்று அழைத்ததோடு, “யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Spread the love