May 27, 2026

தூத்துக்குடி பள்ளி மாணவி பாலியல் படுகொலை வழக்கில் தர்ம முனீஸ்வரனுக்கு தூக்கு தண்டனை

கோவில்பட்டி: குளத்தூர் அருகே வேடநத்தம் பள்ளி மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரனுக்கு தூக்கு துண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே வேடநத்தத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 17 வயது மகள், அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மார்ச் 10-ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை.

மறுநாள் (மார்ச் 11) மாலை கிராமத்துக்கு அருகே காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து மாணவியை கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி, கிராம மக்கள் உட்பட பல்வேறு அமைப்புகள், கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து, 10 தனிப்படைகள் வரை அமைத்த போலீஸார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முனியசாமி மகன் மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் (37) என்பவரை மார்ச் 19-ம் தேதி பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்தான் மாணவியை கொலை செய்தது தெரிய வந்தது. இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று (மே 25) தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை வேடநத்தம் மாணவி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா தீர்ப்பு வழங்கினார். பின்னர், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு தூக்கு தண்டனை விதித்து அவர் உத்தரவிட்டார்.

ஏற்கெனவே ஆயுள் தண்டனை: கடந்த 2020-ம் ஆண்டு பிப்.2-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கீழஈரால் பகுதியில் பாப்பா (65) என்ற மூதாட்டியிடம் நகைகளை திருடி பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த தர்ம முனீஸ்வரனை போலீஸார் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. இதில், கடந்த ஆண்டு தர்ம முனீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, அவருக்கு கடந்த ஆண்டு டிச.18-ல் ஜாமீன் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி டிச.24-ம் தேதியில் இருந்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார்.

இதற்காக அவர் சாயல்குடியில் இருந்து வேடநத்தம் வழியாக குறுக்குச் சாலை வழியாகவே தூத்துக்குடி வந்து சென்றபோதுதான், வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார் என்பது போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Spread the love