‘இந்து தமிழ் திசை’ – கனரா ரோபேகோ மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தின
சென்னை: எதிர்கால தேவைகளுக்கான நிதி திட்டமிடல், முதலீடுகள் குறித்து மக்கள் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என சென்னையில் நடந்த ‘இந்து தமிழ் திசை’ – கனரா ரோபேகோ மியூச்சுவல் ஃபண்ட் சிறப்பு நிகழ்ச்சியில் அறிவுரை வழங்கப்பட்டது.
பல்வேறு துறைகளில் பல வழிகாட்டு நிகழ்ச்சிகளை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தொடர்ந்து நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கனரா ரோபேகோ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துடன் இணைந்து ‘பெண்கள் பலம் வாழ்வாதாரம்’ எனும் பெண்களுக்கான பொருளாதார முன்னேற்றத்தை வலியுறுத்தும் சிறப்பு நிகழ்ச்சியை சென்னை மயிலாப்பூரில் நேற்று முன்தினம் நடத்தியது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோர் பாங்கிங் சேனல் மற்றும் இன்ஸ்டி டியூஷனல் சேல்ஸ் நேஷனல் ஹெட் கே.கோபிநாத் பேசியதாவது: நிதி முதலீடுகளை எவ்வளவு சீக்கிரமாக தொடங்குகிறோமோ, அந்த அளவுக்கு அதன் பலன்களும் அதிகமாக இருக்கும்.
பொதுவாக நிலையான வைப்பு நிதி (எஃப்டி) போன்ற சேமிப்புகள் வழக்கமான வருமானத்துக்கு உதவக்கூடும். ஆனால், நீண்டகால அடிப்படையில் செல்வத்தை உருவாக்குவதற்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். மியூச்சுவல் ஃபண்ட் என்றாலே பங்குச்சந்தை ஆபத்து நிறைந்தது என்ற பொதுவான கருத்து உள்ளது.
ஆனால் இதில் பங்குச்சந்தை தொடர்பு இல்லாத அரசுப் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படும் பாதுகாப்பான திட்டங்களும் உள்ளன. எனவே எதிர்கால தேவைகளை திட்டமிடும்போது எதார்த்தமான கணக்கீடு மிக முக்கியம். பள்ளிக் கட்டண உயர்வு, அன்றாட பயன்பாட்டு பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றை நம்மால் தவிர்க்க முடியாது.

பணவீக்கத்தின் காரணமாக எதிர்காலத்துக்கு மட்டுமின்றி, தற்போதையை வாழ்க்கை முறையை தக்க வைத்துக் கொள்வதற்கே கூடுதல் நிதி தேவைப்படுகிறது. இதற்கு மேலாக, எதிர்பாராமல் வரும் மருத்துவச் செலவுகள் வேறு. எனவே முதலீடுகள் குறித்து மக்கள் போதிய விழிப்புணர்வுடன் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.
மக்கள் தங்களுக்குப் பொருத்தமான திட்டங்களைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து பொருளாதார நிபுணர் சோம.வள்ளியப்பன் பேசுகையில், “கல்வி, தகவல் தொழில்நுட்பம் என அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர்.
எனினும் நிதி சார்ந்த முதலீட்டு முடிவுகளில் பெண்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. பெண்கள் தங்களது சேமிப்பு பழக்கத்தை முதலீடாக மாற்ற முன்வர வேண்டும். அஞ்சறைப் பெட்டியிலும், வீட்டிலும் பணத்தை பூட்டி வைப்பது பணவீக்கத்தின் காரணமாக அதன் மதிப்பை இழக்கச் செய்யும்.
பெண்கள் தங்களின் சேமிப்பை சரியான முதலீட்டுத் திட்டங்களில் ஈடுபடுத்தி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியோடு தங்களின் பொருளாதார நிலைமையையும் உயர்த்திக்கொள்ள வேண்டும்.
இளைஞர்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா திகழ்வதால், அடுத்த சில தசாப்தங்களுக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும். இந்த வளர்ச்சியை முதலீட்டாளர்கள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் பலரும் பரஸ்பர நிதியில் முதலீடு செய்வது குறித்த தங்களது சந்தேகங்ளை நிபுணர்கள் கே.கோபிநாத், சோம.வள்ளியப்பன் ஆகியோரிடம் கேட்டறிந்தனர்.
அதற்கு பதிலளித்த இருவரும் சேமிப்பில் முதலீடு செய்யும் முறைகள், அதன்மூலமாக பெண்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கி, அவர்களது சந்தேகங்களை தீர்த்து வைத்தனர்.

More Stories
பிலிப்பைன்ஸ், வியட்நாமை தொடர்ந்து இந்தோனேசியாவுக்கும் பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை
பெட்ரோல் ஏற்றுமதி வரி பாதியாகக் குறைப்பு
சாம்சங் செமி கண்டக்டர் பிரிவு ஊழியர்களுக்கு தலா ரூ.3.25 கோடி போனஸ்