June 10, 2026

பிரபலங்களின் பெயர்களில் போலித் திட்டம்: ஓய்வு வங்கி அதிகாரி ரூ.90 லட்சம் இழந்தது எப்படி?

அகமதாபாத்: குஜ​ராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 73 வயது முதி​யவர். பாரத ஸ்டேட் வங்​கி​யில் (எஸ்​பிஐ) பணி​யாற்றி ஓய்வு பெற்​றவர். கடந்த 2025 நவம்​பரில் ஒரு முதலீட்டு வாய்ப்பைக் கண்​டுள்ளார். அது உண்​மை​யானது என்று நம்பவைப்​ப​தற்​காக, பிரபல தொழில​திபர்​களின் பெயர்​கள் அதில் தவறாகப் பயன்​படுத்​தப்​பட்​டிருந்​தன. இதை நம்பி அவர் அதில் இருந்த இணைப்பை கிளிக் செய்​துள்​ளார்.

இந்த நடவடிக்கை அவரை ‘வென்ட்ரா ட்ரேட்’ என்ற வர்த்தக செயலியை பதி​விறக்​கம் செய்ய வைத்​தது. இதுவே அவரது பல மாத கால துயரத்​துக்​கும், இறு​தி​யில் வாழ்​நாள் சேமிப்பை அவர் இழப்​ப​தற்​கும் தொடக்​க​மாக அமைந்​தது. செயலியை நிறுவியதைத் தொடர்ந்​து, வாட்​ஸ்​அப் மூலம் அந்த முதி​ய​வரைத் தொடர்பு கொண்ட சிலர், தங்​களை தொழில்​முறை முதலீட்டு ஆலோ​சகர்​கள் மற்​றும் போர்ட் ஃ​போலியோ மேலா​ளர்​கள் என்று அறி​முகப்​படுத்​திக் கொண்​டனர்.

பங்​குச் சந்தை முதலீடு​கள் மற்​றும் கமாடிட்டி வர்த்​தகம் மூலம் அதிக லாபம் தரு​வ​தாக அவர்​கள் உறு​தி​யளித்​தனர். ஓய்​வு​பெற்ற வங்கி அதி​காரி​யின் நம்​பிக்​கை​யைப் பெறு​வதற்​காக, மோசடி செய்​பவர்​கள் ஆரம்​பத்​தில் அவரது முந்​தைய முதலீடு​களின் லாபம் என்று கூறி ரூ.21,999-ஐ அவரது கணக்​கில் செலுத்​தினர். இந்த வெற்​றி​யி​னாலும், அந்த செயலி​யின் திரை​யில் காட்​டப்​பட்ட போலி லாபங்​களி​னாலும் ஊக்​கமடைந்த அந்த முதி​ய​வர், 2025 நவம்​பர் முதல் 2026 ஏப்​ரல் வரையி​லான கால​கட்​டத்​தில் ஆர்.டி.ஜி.எஸ். மூலம் பெரும் தொகையை பரி​மாற்​றம் செய்​தார்.

பாதிக்​கப்​பட்ட முதி​ய​வர் தனது கணக்​கில் சேர்ந்த தொகை​யைத் திரும்​பப் பெற முயன்​ற​போது​தான் இந்த மோசடி வெளிச்​சத்​துக்கு வந்​தது. விதி​முறைச் சிக்​கல்​கள் காரண​மாக அவரது வர்த்​தகக் கணக்கு முடக்​கப்​பட்​டுள்​ள​தாகக் கூறி மோசடி செய்​பவர்​கள் அவரது கோரிக்​கையை நிராகரித்​தனர்.

ஒட்​டுமொத்த முதலீட்​டுத் தளமும் ஒரு திட்​ட​மிட்ட போலி கட்டமைப்பு என்​பதை உணர்​வதற்​குள், கடந்த 7 மாத காலத்​தில் அந்த ஓய்​வு​பெற்ற வங்கி அதி​காரி மொத்​தம் ரூ.90.75 லட்​சத்தை இழந்​துள்​ளார். அவரது புகாரைத் தொடர்ந்​து, போலீ​ஸார் விசாரிக்கின்றனர்.

Spread the love