சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: வீட்டு உபயோகத்துக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது சாமானிய மக்களுக்குக் கடும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
தற்போது சிலிண்டருக்கு ரூ.29 உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம், கடந்த 3 மாதங்களில் மட்டும் ஒட்டுமொத்தமாக ரூ.89 வரை சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக, சென்னையில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை ரூ.957.50 ஆகவும், வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.3,283 ஆகவும் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 108 டாலருக்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது அது சுமார் 15 டாலர் வரை சரிந்துள்ளது. இப்படி சர்வதேச சந்தை நிலவரம் சாதகமாக இருந்தும், தொடர்ச்சியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்துவது அநியாயமானது.
மத்திய ஆட்சியாளர்கள் 5 மாநில தேர்தல் காரணமாக, எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படாமல் இருந்ததாகவும், அந்த இழப்பை ஈடுகட்டவே தற்போது, தொடர்ச்சியாக விலை உயர்த்தப்படுகிறது என்று கூறுகிறார்கள்.
அரசு நினைத்தால் விலை உயர்வை நிறுத்தி வைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும். ஆனால், தேர்தல் ஆதாயத்துக்காக விலையை உயர்த்தாமல் நாடகமாடிய மத்திய அரசு, தேர்தல் முடிந்தவுடன் விலையை ஏற்றி மக்களைத் துன்புறுத்துகிறது.
இதனால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், மொத்த விற்பனை விலை பணவீக்கம் கடந்த மூன்றரை ஆண்டுகளில் முதன்முறையாக 8.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
அசாமில் இனி 18 வயதிற்கு மேற்பட்டோர் ஆதார் கார்டு பெற தடை: பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்..
“தகுதியுடைய வாக்காளர்களின் பெயர் இடம்பெறுவதை உறுதி செய்க” – தேர்தல் ஆணையத்துக்கு ஒவைசி வேண்டுகோள்
உணவுப் பாக்கெட்டுகளில் ஊசி பயன்படுத்தக் கூடாது: உணவுப் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு