மும்பை: மும்பை, இந்தியப் பங்குச் சந்தைகள் நேற்று உயர்வுடன் முடிவடைந்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி லாபம் கிடைத்துள்ளது. அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக இந்திய பங்குச் சந்தை நிஃப்டி, மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் ஆகியவை கடும் சரிவை சந்தித்து வந்தன.
இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்திருந்தனர். இந்நிலையில் நேற்று சென்செக்ஸ் 1695.40 புள்ளிகளும், நிஃப்டி 461.30 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகம் நிறைவடைந்தது. ஈரான் உடனான போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை பெருமளவில் சரிந்தது. இதன் காரணமாக உலகளாவிய சந்தைகள் எழுச்சியுடன் இந்திய பங்குச் சந்தையும் ஏற்றத்தைக் கண்டது.
நேற்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் அதிகபட்சமாக 1,775.47 உயர்ந்தது. இது 2.40 சதவீத உயர்வாகும். இறுதியில் 1,695.40 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இது 2.30 சதவீத உயர்வு ஆகும். அதேபோல் இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி வர்த்தகத்தில் 483.75 புள்ளிகள் அல்லது 2 சதவீதம் அதிகரித்து வர்த்தகமானது.
இறுதியில் 1.99 சதவீதம் அல்லது 461.30 புள்ளிகள் உயர்ந்தன. பங்குச்சந்தையின் எழுச்சி காரணமாக முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி லாபம் கிடைத்துள்ளதாக பங்குச்சந்தை விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 3.98 சதவீதம் குறைந்தது. பஜாஜ் பைனான்ஸ், லார்சன் அண்டு டூப்ரோ பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் ஏற்றத்தை கண்டன. இந்த வாரஇறுதியில் ஐரோப்பாவில் அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்ற அதிபர் ட்ரம்பின் அறிவிப்பு முதலீட்டாளர்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 89 டாலராகக் குறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் மற்றும் ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், சீனா உள்ளிட்ட ஆசியப் பங்குச்சந்தைகள் அனைத்தும் நல்ல லாபத்துடன் முடிவடைந்துள்ளதால் அதன் தாக்கம் இந்தியச் சந்தையிலும் எதிரொலித்தது.
இந்த 3 காரணிகளால் இந்திய பங்குச்சந்தைகளில் மாபெரும் எழுச்சி நேற்று ஏற்பட்டது. நேற்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.25 ஆக இருந்தது.

More Stories
தங்கம் விலை மேலும் உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?
தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,400 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?
2026-ம் நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி ரூ.82 லட்சம் கோடியை எட்டி சாதனை