June 14, 2026

இந்திய பங்குச் சந்தையில் எழுச்சி – முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி லாபம்

மும்பை: மும்​பை, இந்​தி​யப் பங்குச் சந்தைகள் நேற்று உயர்​வுடன் முடிவடைந்​தன. இதனால் முதலீட்​டாளர்​களுக்கு ரூ.10 லட்​சம் கோடி லாபம் கிடைத்​துள்​ளது. அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக இந்​திய பங்​குச் சந்தை நிஃப்​டி, மும்பை பங்​குச் சந்தை சென்செக்ஸ் ஆகியவை கடும் சரிவை சந்​தித்து வந்​தன.

இதனால் பங்​குச்​சந்தை முதலீட்​டாளர்​கள் லட்​சக்​கணக்கில் பணத்தை இழந்​திருந்​தனர். இந்​நிலை​யில் நேற்று சென்செக்ஸ் 1695.40 புள்​ளி​களும், நிஃப்டி 461.30 புள்​ளி​களும் உயர்ந்து வர்த்​தகம் நிறைவடைந்​தது. ஈரான் உடனான போர் முடிவுக்கு வரு​வ​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறி​வித்​துள்ள நிலை​யில், கச்சா எண்​ணெய் விலை பெரு​மள​வில் சரிந்​தது. இதன் காரண​மாக உலகளா​விய சந்​தைகள் எழுச்​சி​யுடன் இந்​திய பங்​குச் சந்​தை​யும் ஏற்​றத்​தைக் கண்​டது.

நேற்​றைய வர்த்​தகத்​தில் மும்பை பங்​குச்​சந்தை குறி​யீடு எண் சென்​செக்ஸ் அதி​கபட்சமாக 1,775.47 உயர்ந்​தது. இது 2.40 சதவீத உயர்​வாகும். இறுதியில் 1,695.40 புள்​ளி​கள் உயர்வுடன் வர்த்​தகம் நிறைவடைந்​தது. இது 2.30 சதவீத உயர்வு ஆகும். அதே​போல் இந்திய பங்​குச் சந்தை குறி​யீடு எண் நிஃப்டி வர்த்​தகத்​தில் 483.75 புள்ளி​கள் அல்​லது 2 சதவீதம் அதி​கரித்து வர்த்​தக​மானது.

இறு​தி​யில் 1.99 சதவீதம் அல்​லது 461.30 புள்​ளி​கள் உயர்ந்​தன. பங்​குச்​சந்​தை​யின் எழுச்சி காரண​மாக முதலீட்டாளர்​களுக்கு ரூ.10 லட்​சம் கோடி லாபம் கிடைத்​துள்​ள​தாக பங்​குச்​சந்தை விமர்​சகர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

மேலும், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 3.98 சதவீதம் குறைந்தது. பஜாஜ் பைனான்​ஸ், லார்​சன் அண்டு டூப்ரோ பங்குகள் நேற்​றைய வர்த்தகத்​தில் ஏற்றத்தை கண்​டன. இந்த வாரஇறு​தி​யில் ஐரோப்பாவில் அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்தாகலாம் என்ற அதிபர் ட்ரம்​பின் அறி​விப்பு முதலீட்​டாளர்களிடையே பெரும் நம்​பிக்​கையை ஏற்படுத்​தி​யுள்​ளது.

அதே​போல் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 89 டால​ராகக் குறைந்துள்​ளது. அது​மட்​டுமல்​லாமல், அமெரிக்​கா​வின் வால் ஸ்ட்​ரீட் மற்​றும் ஜப்​பான், தென் கொரி​யா, ஹாங்​காங், சீனா உள்​ளிட்ட ஆசி​யப் பங்​குச்​சந்​தைகள் அனைத்​தும் நல்ல லாபத்​துடன் முடிவடைந்​துள்​ள​தால் அதன் தாக்​கம் இந்​தி​யச் சந்​தை​யிலும் எதிரொலித்​தது.

இந்த 3 காரணி​களால் இந்​திய பங்​குச்​சந்​தைகளில் மாபெரும் எழுச்சி நேற்று ஏற்​பட்​டது. நேற்​றைய வர்த்தக தொடக்​கத்​தில் அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​தி​ய ரூபா​யின்​ மதிப்​பு ரூ.95.25 ஆக இருந்​தது.

Spread the love