June 17, 2026

முதல்வர் விஜய்க்கு, நடிகர் விஷாலின் வித்தியாசமான பரிசு! | CM Vijay | Vishal

உங்களின் ஊக்கமளிக்கும் பயணமும், மக்களுக்கான சேவையில் உங்களுக்கு இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வும் எண்ணற்ற இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது.

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜயை சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஷால் முதல்வர் விஜயை சந்தித்துள்ளார். விஷால் தனது தேவி அறக்கட்டளை மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல ஏழை மாணவ, மாணவிகளின் உயர் கல்விக்கு உதவி செய்து வருகிறார். மேலும், தான் நடத்தும் நிகழ்ச்சி மற்றும் மற்றவர்களை சந்திக்கும் போது அவர்களுக்கு வழங்கும் பொன்னாடை, பூங்கொத்து உள்ளிட்ட பரிசுகளை தவிர்த்து வருபவர், அதற்கு மாறாக சம்மந்தப்பட்டவர்களின் பெயரில் ஏழை மாணவர்களின் உயர் கல்விக்கு உதவி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், ஜூன் 15 ஆம் தேதி முதல்வர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய், அவருக்கு வழங்கப்படும் பரிசாக, அவரது பெயரில் மூன்று ஏழை மாணவிகளின் உயர் கல்விக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஜோசப் விஜயிடம், மூன்று மாணவிகளின் விபரம் அடங்கிய கடிதம் ஒன்றையும் அவர் வழங்கினார். அதில், “உங்களின் ஊக்கமளிக்கும் பயணமும், மக்களுக்கான சேவையில் உங்களுக்கு இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வும் எண்ணற்ற இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. உங்கள் மீதான மரியாதை மற்றும் பாராட்டுக்குரிய அடையாளமாக, பின்தங்கிய நிலையில் உள்ள மூன்று மாணவிகளின் (எம்.லில்லி புஷ்பம் –  B.Sc (CS), எம்.ஹரினி –  BCA, பி.தர்ஷினி  – B.Com (G)) உயர் கல்விச் செலவை உங்கள் பெயரில் ஏற்று நடத்த நான் முடிவு செய்துள்ளேன்.

தற்காலிகமான ஒரு செயலாக அமையும் பூங்கொத்தை வழங்குவதற்குப் பதிலாக, ஒரு குழந்தையின் கல்விக்கு ஆதரவளிப்பது நீண்டகால நற்பலனைத் தருவதோடு, அவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க உதவும் என்று நான் நம்புகிறேன். உங்கள் பெயரில் மேற்கொள்ளப்படும் இந்த சிறிய முயற்சியை அன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழக மக்களுக்கான உங்கள் சேவையில் உங்களுக்குத் தொடர்ந்து வலிமையும், நல்வாழ்வும், வெற்றியும் கிடைக்க வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார். நடிகர் விஷாலின் இந்த பரிசை பெற்றுக்கொண்ட முதல்வர் ஜோசப் விஜய், அவருக்கு நெகிழ்ச்சியோடும், மகிழ்ச்சியோடும் நன்றி தெரிவித்து, ”உங்களின் இத்தகைய சேவை முயற்சி தொடரட்டும்” என்று வாழ்த்தினார்.

Spread the love