
இஸ்லாமாபாத்: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகின்றன. கொழும்பு நகரில் வரும் 15-ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் வகையில் அட்டவணை இருந்தது.
இதற்கிடையே இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாட தங்கள் அணி இந்தியாவுக்கு வராது என வங்கதேசம் அறிவித்தது. இதனால், அந்த அணியை நீக்கிவிட்டு ஸ்காட்லாந்து அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சோ்த்தது.
வங்கதேச அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்தியாவுக்கு எதிராக வரும் 15-ம் தேதி கொழும்பு நகரில் நடைபெறும் ஆட்டத்தைப் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் பாகிஸ்தானுக்கு பயணம் செய்த ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜா, லாகூரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரான மொஹ்சின் நக்வியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பேச்சுவார்த்தையின் போது பாகிஸ்தான் வாரியம் தரப்பில் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு எந்தவித தடையும் விதிக்கப்படாது என்றும், 2028-2031 சுழற்சியில் ஆடவருக்கான யு-19 உலகக் கோப்பை தொடரை நடத்தும் உரிமை வழங்கப்படும் என ஐசிசி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால் அதேவேளையில் பாகிஸ்தானுக்கு ஏதேனும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. இதைத் தொடர்ந்து மொஹ்சின் நக்வி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பைச் சந்தித்து ஐசிசி மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து விளக்கினார்.
இதற்கிடையே இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியங்கள் பாகிஸ்தானுக்குக் கடிதம் மூலம் டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுமாறு கோரிக்கை விடுத்தன.மேலும் இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, “இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான நீண்ட கால நட்புறவைக் கருத்தில் கொண்டும், சர்வதேச கிரிக்கெட்டின் நலன் கருதியும் இந்தியாவுடனான போட்டியில் பங்கேற்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். நட்பு நாடுகளின் கோரிக்கைகள் மற்றும் ஐசிசியின் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர், இறுதியில் இந்தியாவுடன் விளையாட ஒப்புதல் அளித்தார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு தரப்பில் திங்கள்கிழமை நள்ளிரவில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பலதரப்பு பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட முடிவுகள் மற்றும் நட்பு நாடுகளின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியை பிப்ரவரி 15-ல் டி20 உலகக் கோப்பையில் திட்டமிடப்பட்ட போட்டிக்காக களமிறங்குமாறு அறிவுறுத்தி உள்ளோம்.
கிரிக்கெட்டின் உணர்வைப் பாதுகாப்பதற்கும், பங்கேற்கும் அனைத்து நாடுகளிலும் இந்த உலகளாவிய விளையாட்டை ஆதரிப்பதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடனான போட்டியை புறக்கணிப்பதை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு சில சலுகைகளை வழங்க ஐசிசி வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் கூறும்போது, “ஐசிசி-யிடமிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெற்றுள்ள சலுகைகள் என்ன என்பது டி20 உலகக் கோப்பை முடிந்த பின்னரே பகிரங்கப்படுத்தப்படும்” என்றன.
ஐசிசி-யிடமிருந்து பாகிஸ்தான் வாரியம் பெறும் வருவாயின் பங்கை அதிகரிக்க நக்வி வலியுறுத்துவதாக ஊகங்கள் எழுந்துள்ளன, ஆனால் அடுத்த நிதிச் சுழற்சிக்கான ஐசிசி வாரியத்தின் ஒப்புதலுக்குப் பிறகு தான் இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தையின் போது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, டி 20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நடுநிலையான மைதானங்களில் விளையாடுவது போன்று ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் விளையாடுவதற்கான வழிகளை கண்டறிய வேண்டும் நக்வி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

More Stories
‘‘பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் விளையாடுவது பெரிய சவால்’’ – இந்திய அணி உதவி பயிற்சியாளர்
சிஎஸ்கேவின் ‘விசில் போடு’ விளம்பரத்தில் மாற்றமா?
T20 WC 2026 அலசல்: ஆர்ச்சர், ஆதில் ரஷீத் பந்துவீச்சை நொறுக்கிய நேபாளம்!