சென்னை: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சின்னங்களில் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது: தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கின்றன. அப்படி அமைக்கும் போது, கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சியின் சின்னத்தில், அங்கீகாரமற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்களும் போட்டியிட்டு வருகின்றனர்.
அதற்கேற்ப, கூட்டணியில் அங்கம் வகிக்கும் மாற்று கட்சி வேட்பாளர்களை தங்களது கட்சி உறுப்பினர்களாக அங்கீகரித்து தேர்தல் படிவங்கள் வழங்கப்படுகின்றன. அதை தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொள்கிறது.
ஜனநாயகம் கேள்விக்குறியாகும்: ஒரு கட்சியின் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள், அவர்கள் சார்ந்துள்ள கட்சியின் உறுப்பினர்களாகவே பேரவையில் செயல்படுகின்றனர்.
இது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும் செயல். அரசியல் கட்சிகளின் இதுபோன்ற செயல்பாடுகளை ஒருபோதும் தேர்தல் ஆணையம் ஊக்குவிக்கக்கூடாது. கூட்டணியில் உள்ள மாற்று கட்சியினரை தங்களது கட்சியினராக அங்கீகரிக்கும் அரசியல் கட்சிகளின் ‘ஏ ’படிவம் மற்றும் ‘பி’ படிவத்தை வேட்பு மனு பரிசீலனையின் போது கண்டிப்பான முறையில் ஆய்வு செய்ய வேண்டும்.
தேர்தல் சின்னங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க தகுந்த வழிகாட்டுதல்களை வகுக்கவும், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்களது கட்சியினருக்கு மட்டுமே தங்களது சின்னத்தை ஒதுக்க வேண்டுமென்றும், மாற்று கட்சிகளின் வேட்பாளர்களுக்கு தங்களது சின்னத்தை ஒதுக்க தடை விதிக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
தேர்தல் ஆணையம் நடவடிக்கை: இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சின்னங்கள் ஒதுக்கீட்டில் விதிமீறல்கள் இருந்தால் அதுதொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும். மேலும், இதுதொடர்பாக தேர்தல் வழக்கு மட்டுமே தொடர முடியும் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

More Stories
தொகுதி மறுவரையறை விஷயத்தில் சர்வாதிகாரத்தை நோக்கி இந்தியா நகர்கிறதா? – ஸ்டாலின் காட்டம்
‘வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் முன்பதிவு செய்து 10 நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை!’
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்கள்..தொற்றாநோயால் உயிருக்கு ஆபத்து அதிகம் – அதிர்ச்சி ஆய்வு தகவல்!