வாஷிங்டன்: இந்திய வம்சாவளிப் பெண் வெங்கட வசம்செட்டி கடந்த 27 வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். மேலும் இவர் கிரீன் கார்டையும் வைத்துள்ளார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே அமெரிக்காவில் பிறந்து அங்கேயே வசித்து வருகின்றனர்.
மேலும் வெங்கட வசம்செட்டிக்கு 2 பேரக்குழந்தைகளும் உள்ளனர். மகள்களுடன் வெங்கட வசம்செட்டி டெக்சாஸில் வசித்து வருகிறார். இவரது மகள் யஷஸ்வினி வசம்செட்டி, குடியேற்றப்பிரிவு வழக்கறிஞராக உள்ளார். மேலும், வெங்கட வசம்செட்டி, 2013-ம் ஆண்டு முதல் வடக்கு கரோலினாவில் உள்ள பள்ளியில் சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், வெங்கட வசம்செட்டி அண்மையில் சார்லோட் நகரிலுள்ள குடியேற்றப்பிரிவு அலுவலகத்துக்கு (ஐசிஇ) வழக்கமான குடியேற்றப் பிரிவுச் சோதனைக்காக சென்றுள்ளார். அப்போது அவரை, அதிகாரிகள் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.
கரோனா தொற்று காலத்தின்போது வெங்கட வசம்செட்டி, இந்தியாவுக்கு சென்று 7 மாத காலம் தங்கியிருந்தார். இதனால் அவர் தனது அமெரிக்க நிரந்தர வசிப்பிட உரிமையை இழந்துவிட்டார் என்றும், அதனால்தான் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அமெரிக்காவில் உள்ள உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து வெங்கட வசம்செட்டியை தடுப்புக் காவலில் இருந்து வெளியே கொண்டு வருவதற்காக அவரது மகள்கள் சட்ட உதவியை நாடியுள்ளனர். வெங்கட வசம்செட்டி தனது வசிப்பிடத்தை மாற்றுவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறும் குற்றச்சாட்டையும், வசம்செட்டி குடும்பத்தார் மறுத்துள்ளனர்.
இந்தியாவில் இருந்த 7 மாத காலத்திலும் அமெரிக்காவுடனான தனது தொடர்புகளை வெங்கட வசம்செட்டி தொடர்ந்து வைத்திருந்ததாகவும், தனது வேலையை அவர் தொடர்ந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவுக்குச் சென்றது நிரந்தரமாக அங்கு குடியேறுவதற்காக அல்ல என்றும் வெங்கட வசம்செட்டி தரப்பு விளக்கம் அளித்துள்ளது. மகள்களுடன் வெங்கட வசம்செட்டி.

More Stories
16 வயதிலேயே சிஏ பட்டம் பெற்று சாதனை படைத்த மாணவன்
இம்ரான் கானை சிறையிலிருந்து மருத்துவமனைக்கு மாற்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஹோர்மூஸ் நீரிணையை திறக்கும் முயற்சிக்கு தடையாக இருந்தால் ஓமன் மீது குண்டு வீசுவோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை