புதுடெல்லி: பிஹார் மற்றும் மத்தியப் பிரதேச இடைத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்துள்ள தோல்வி, அடுத்து அக்கட்சி பெற உள்ள தோல்விகளுக்கான தொடக்கமாக இருக்கும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அயோத்தி ராமர் கோயில் காணிக்கை முறைகேட்டைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி, ராமர் கோயில் காணிக்கை முறைகேட்டைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பிரியங்கா காந்தி பதில் அளித்தார். பிஹாரின் பங்கிபூர் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் டட்டியா ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் இரு மாநிலங்களிலும் ஆளும் பாஜக தோல்வி அடைந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த பிரியங்கா காந்தி, “பாஜக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்பது இப்போது தெளிவாகிறது. நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். இது ஒரு தொடக்கம் என்று நான் கருதுகிறேன்” என தெரிவித்தார்.
பெண் மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில், பாஜக முன்னாள் எம்பியும் மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பிரியங்கா காந்தி, “ஒருபுறம் அவர்கள் இளம் தலைமுறையினருக்காகவும், பெண்களின் அதிகாரம் மற்றும் இட ஒதுக்கீட்டுக்காகவும் பாடுபடுவதாகக் கூறுகிறார்கள். மறுபுறம், இதுவா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இடைத் தேர்தல் பின்னணி: பிஹாரின் பங்கிபூர், குஜராத்தின் மஞ்சல்பூர், மத்திய பிரதேசத்தின் டட்டியா ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. பிஹாரின் பங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் நீரஜ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் ரேகா குமாரி, ஜன் சுராஜ் தலைவர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
இந்த தொகுதியின் வாக்கு எண்ணிக்கையின்போது ஆரம்பம் முதலே பிரசாந்த் கிஷோர் முன்னிலையில் இருந்தார். அவர் 64,151 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் நீரஜ் குமாருக்கு 44,827 வாக்குகளும், ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் ரேகா குமாரிக்கு 14,273 வாக்குகளும் கிடைத்தன.
குஜராத்தின் மஞ்சல்பூர் தொகுதியில் ஆளும் பாஜக சார்பில் போட்டியிட்ட சதீஷ் படேல், 55,481 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் பிக்காபாய் ரபாரிக்கு 24,851 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
மத்திய பிரதேசத்தின் டட்டியா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கன்ஷ்யாம் சிங் 66,757 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் அசுதோஷ் திவாரிக்கு 60,741 வாக்குகள் கிடைத்தன.

More Stories
“அப்பாவிகளை கொல்ல எந்த மதமும் அனுமதிப்பதில்லை” – குல்காம் படுகொலைக்கு உமர் அப்துல்லா கண்டனம்
இந்திய இளைஞர்களுக்கு தேவை வேலை வாய்ப்பு… ரீல்ஸ் அல்ல: காங்கிரஸ்
அசாமில் வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 85 ஆக உயர்வு