புதுடெல்லி: கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு தினமும் சுமார் ரூ.1,700 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதை சமாளிக்க விலையை ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது. மேலும் இந்தப் பகுதியில் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் அச்சமும் நிலவுகிறது. அத்துடன், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்க போர் கப்பல்களும் முற்றுகையிட்டுள்ளன. இதனால் கச்சா எண்ணெய் போக்குவரத்து எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும் என்று தெரியவில்லை.
இதனால் உலகளவில் பெட்ரோல், டீசல், காஸ் விலை 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதையடுத்து, இந்தியாவின் அண்டை நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் உயர்த்தப்பட்டன. ஆனால், இந்தியாவில் அவற்றின் விலை உயர்த்தப்படவில்லை. அதேநேரம் வர்த்தக சிலிண்டர் விலை மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட மத்திய அரசு நிதி ஒதுக்கியது. இதன் மூலம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும், எரிபொருள் விலையை உயர்த்தாததால், இந்தியன் ஆயில் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் (பிபிசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (ஹெச்பிசிஎல்) ஆகிய நிறுவனங்களுக்குத் தினமும் ரூ.1,600 கோடி முதல் ரூ.1,700 கோடி வரை நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் கடந்த 10 வாரங்களில் சுமார் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நுகர்வோருக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த நிறுவனங்கள் நஷ்டத்தைத் தாங்கிக் கொண்டாலும், நிதி ரீதியாக இது எவ்வளவு காலம் சாத்தியம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

More Stories
தொழிற்பயிற்சி பட்டதாரிகளுக்கு ஜப்பானில் வேலை: தமிழக அரசு, எஹிமே-நிசான் நிறுவனம் ஒப்பந்தம்
ரூ.31,500 கோடி மதிப்பிலான எல்ஐசி-யின் இரண்டாம் நிலை பங்கு விற்பனை வெற்றி
போலி விவரங்களை சமர்ப்பிக்கும் மருந்து நிறுவனங்களுக்கு தடை