புதுடெல்லி: டாக்டர் ரெட்டீஸ் லேபரேட்டரீஸ், டாகேடா பார் மாசூட்டிகல்ஸ் ஆகிய நிறுவனங்கள் கூட்டாக இணைந்து, இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசியான ‘கியூடெங்கா’வை இந்தியாவில் சந்தைப்படுத்தவும் விநியோகிக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளன.
இதுகுறித்து டாகேடா நிறுவனத்தின் சர்வதேச சந்தைப் பிரிவின் தலைவர் மகேந்தர் நாயக் கூறுகையில், “கடந்த ஜூலை மாதம்தான் சந்தைப்படுத்துவதற்கான அனுமதி எங்களுக்குக் கிடைத்தது. டாக்டர் ரெட்டீஸ் உடனான கூட்டு ஒப்பந்தத்தின்படி, அமலில் உள்ள ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டு, மருத்துவ நிபுணர்களை ஒருங்கிணைத்தல், சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான தடுப்பூசியை இந்தியாவின் தனியார் சந்தையில் விளம்பரம் செய்து விநியோகித்தல் போன்ற பணிகளை இரு நிறுவனங்களும் இணைந்து மேற்கொள்ளும்.
இந்தியாவின் பொதுத் தடுப்பூசி திட்டத்தில் கியூடெங்கா டெங்கு தடுப்பூசியைச் சேர்ப்பதே நீண்டகால இலக்காகும்” என்றார் அவர். நாட்டின் தனியார் மருத்துவச் சந்தையில் 2027-ம் ஆண்டின் முதல் பாதியில் ‘கியூடெங்கா’ தடுப்பூசி இந்தியாவில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதேவேளையில், இத்தடுப்பூசியின் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.
முன்னதாக, 4 முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு இத்தடுப்பூசியைப் பயன்படுத்த மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த ஜூலை மாதம் சந்தைப்படுத்தல் அனுமதியை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More Stories
“சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா அசாதாரண முன்னேற்றம்” – பிரதமர் மோடி பெருமிதம்
‘பெண்களால் சிலிண்டரைத் தூக்க முடியாதா?’ – பெண்ணுக்கு பணி தர மறுத்த ஐஓசி-க்கு ரூ.12 லட்சம் அபராதம்
திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய் விநியோகம்: சுக்ரிதி ஃபுட்ஸ் நிறுவன உரிமையாளர் கைது