June 10, 2026

இன்ஸ்டாகிராம் பதிவு குறித்த ‘மெட்டா’ எச்சரிக்கையால் இளைஞரின் தற்கொலையை தடுத்த உத்தர பிரதேச போலீஸார்

மீரட்: இன்ஸ்டாகிராம் பதிவு குறித்த மெட்டா எச்சரிக்கையால் இளைஞரின் தற்கொலையை போலீஸார் தடுத்துள்ளனர்.

உத்தர பிரதேச போலீ​ஸாருக்​கும் மெட்டா நிறு​வனத்​துக்​கும் இடையே ஒரு ஒருங்​கிணைப்பு அமைப்பு உள்​ளது. இது, தற்கொலை தொடர்பான பதிவு​களைக் கண்​டறிந்​து, அதுகுறித்த எச்சரிக்​கைகளை அதி​காரி​களு​டன் பகிர்ந்து கொள்​கிறது.

இதுகுறித்து உத்தர பிரதேச காவல் துறை நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மீரட் நகரின் சர்​தானா பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர், ஜூன் 7-ம் தேதி இன்ஸ்டாகி​ராமில் ஒரு வீடியோவை பதி​விட்​டுள்​ளார். அதில் அவர் வெள்ளை நிற திர​வம் ஒன்றை குடிப்​பது போல் தெரிந்​தது. அந்த வீடியோ​வில், ‘இனி நீ உன் வாழ்க்​கை​யில் மகிழ்ச்​சி​யாக இரு’ என்ற செய்​தி​யும் இருந்​தது.

மாலை 6.53 மணிக்கு இந்​தப் பதிவு குறித்து காவல் துறை தலை​மையகத்​தில் உள்ள சமூக ஊடக மையத்​துக்கு மெட்டா நிறு​வனம் தற்​கொலை எச்​சரிக்​கையை அனுப்பி உள்​ளது. காவல் துறை தலைமை இயக்​குநரின் உத்​தர​வின் பேரில், அந்த மையம், கிடைத்த செல்​போன் எண் மற்​றும் இருப்​பிட விவரங்​களின் அடிப்​படை​யில் உடனடி​யாக மீரட் போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்​தது.

காவல் துறை மூத்த கண்​காணிப்​பாளரின் மேற்​பார்​வை​யில், சர்தானா போலீ​ஸார் அந்த இளைஞரின் வீட்​டுக்கு விரைந்து சென்ற​போது அவரது நிலைமை கவலைக்​கிட​மாக இருந்​தது. அவருக்கு அரு​கில் சந்​தேகத்​துக்​கிட​மான திர​வம் அடங்​கிய பாட்டில் ஒன்​றும் கண்​டெடுத்​துள்​ளனர்.

போலீ​ஸார், குடும்​பத்​தினரின் உதவி​யுடன் அவரை அரு​கில் உள்ள மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். அங்கு அவருக்கு அளிக்​கப்​பட்ட சிகிச்​சைக்​குப் பின் அவரது உடல்​நிலை சீரானது.

காதலில் ஏற்​பட்ட முறி​வைத் தொடர்ந்து கடும் மன உளைச்​சலில் இருந்​த​தால் இந்த தீவிர முடிவை எடுக்க முயன்​ற​தாக அந்த இளைஞர் விசா​ரணை​யின்​போது தெரி​வித்​துள்​ளார். இதையடுத்து அந்த இளைஞருக்​கும் அவரது குடும்​பத்​தினருக்​கும் போதிய ஆலோ​சனை​களும், தேவை​யான வழி​காட்​டு​தல்​களும் வழங்​கப்​பட்​டன. இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

3,000-க்​கும் மேற்​பட்​டோர்…

ஜனவரி 1, 2023 முதல் மே 31, 2026 வரை, இது​போன்ற எச்சரிக்கைகளின் மீது எடுக்​கப்​பட்ட நடவடிக்​கை​களின் மூலம் உத்தர பிரதேசம் முழு​வதும் 3,011 பேரின் உயிர்​கள் காப்​பாற்​றப்​பட்​டுள்​ள​தாக காவல்​ துறை தெரிவித்​துள்​ளது.

Spread the love