அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
வாஷிங்டன்: மேற்காசிய போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஈரான் முன்மொழிந்துள்ள அமைதிக்கான நிபந்தனைகளில் தனக்கு திருப்தி இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேற்காசிய போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஈரான் அரசு திருத்தப்பட்ட புதிய நிபந்தனைகளை அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே மத்தியஸ்தம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் மூலம் இது அமெரிக்காவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளதாவது:
இரண்டு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் உள்ளது. இருந்தாலும் போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் முன்மொழிந்துள்ள நிபந்தனைகள் ஏற்புடையவை அல்ல. அது எனக்கு திருப்திகரமாக இல்லை. அவர்களின் அரசு தலைமை ஒருங்கிணையாமல் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேற்காசிய போர்: கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க நேச நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்தச் சூழலில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, அமெரிக்கா – ஈரான் பிரதிநிதிகள் இடையே கடந்த 11, 12-ம் தேதிகளில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனினும் அமைதி முயற்சிக்காக காலவரையின்றி போர் நிறுத்தம் அமல் செய்யப்படுவதாக அதிபர் ட்ரம்ப் கடந்த வாரம் அறிவித்தார்.
இதனால் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு தரப்பும் முரண்படுவதால் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் வணிக எரிவாயு சிலிண்டரின் விலை நேற்று ஒரே நாளில் ரூ.990 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

More Stories
“மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தயார்” – ஈரானிடம் புதின் உறுதி
ஈரான் – அமெரிக்கா இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தை மறுப்பு: பாகிஸ்தானில் தொடரும் ராஜதந்திர நகர்வுகள்!
லெபனான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் 3 வாரங்களுக்கு நீட்டிப்பு: ட்ரம்ப் அறிவிப்பு